அரியலூர் மாணவியின் கடைசி வாக்குமூலம்… செல்போனை டிஎஸ்பி அலுவலகத்தில் ஒப்படைப்பு : வீடியோ உண்மை நிலையை உறுதிப்படுத்த முடிவு..?
Author: Babu Lakshmanan25 January 2022, 11:28 am
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசிய வீடியோவை பதிவு செய்தவர் வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகி செல்போனை ஒப்படைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஞாயிறன்று மாணவியின் பெற்றோர் தஞ்சையில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர், மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை பெற்ற மதுரை உச்ச நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தவில், மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்தாக கூறப்படும் வீடியோ உண்மையானது தானா என்பது குறித்து தடயவியல் பரிசோதனையில் உறுதிப்படுத்த வேண்டியதுள்ளது.
இதனால் அந்த வீடியோவை பதிவு செய்த முத்துவேல் நாளை (இன்று )காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று காலை வல்லம் டிஎஸ்பி பிருந்தா முன்பு மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா, உறுப்பினர்கள் விஷ்வ இந்து பரிஷத் அரியலூர் மாவட்ட உறுப்பினர் முத்துவேல் செல்போனை ஆஜராகி டிஎஸ்பிடம் ஒப்படைத்தார்.
0
0