500 ஆண்டு கால கனவு நினைவாகிறது…! பூர்வ ஜென்ம பூமியில் உதிக்கும் ராமர் கோவில் : கடந்து வந்த வரலாறு…!
4 August 2020, 5:42 pmவரலாறுகள் காலத்தின் பதிவுகள்; காலம் தவறாக இருந்தாலும் சரியாக இருந்தாலும் பாரபட்சமில்லாமல் பதிவு செய்வதுதான் வரலாற்றில் முக்கியம். அந்த வகையில் இப்போது அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
அது இதுவரை பயணம் செய்த பாதையை இங்கே அலசுவோம். 1528ல் மசூதியில் உள்ள கல்வெட்டுகள் அடிப்படையிலும் அரசு ஆவணங்களின் அடிப்படையிலும் 1528 -1530 காலகட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மலைக் குன்றில் முகலாய சக்கரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவரது பிரதிநிதியாக அமைந்த பாகி என்பவரால் மசூதி கட்டப்பட்டது. இந்த மசூதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1853-ல் மாபெரும் மதக் கலவரம் மூண்டது.
1859-ல் இந்த பிரச்சனையில் தலையிட்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சி மசூதியின் உள்பகுதியில் முஸ்லிம்கள் வழிபாடு செய்யவும் வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யவும் உத்தரவிட்டது. இதை அமுல்படுத்த வேலி அமைக்கப்பட்டது. 1949 இல் ராமர் சிலைகளை மசூதிக்குள் இந்துக்கள் பிரதிஷ்டை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பும சிவில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், சர்ச்சைக்குரிய இடத்தை மூடியது அரசு.
1984இல் இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, இந்த இடத்தை விடுவித்து ராமருக்கு கோவில் கட்ட முயன்றது விஸ்வ ஹிந்த் அமைப்பு. அந்த ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக நாடெங்கும் ரத யாத்திரை நிகழ்த்தி கட்சியின்மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். 1986 ல் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் கட்டடத்தின் பூட்டுகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டது. இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பாபரி மசூதி அமைப்பு இதற்கு எதிர்வினை நிகழ்த்தியது. இப்படியான சூழ்நிலையில் ஹாய் 1989ல் சர்ச்சைக்குரிய பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1990 இல் சில பகுதிகள் நாசம் செய்யப்பட்டன. அப்போது மத்திய பிரதமராக இருந்த சந்திரசேகர் சமாதானம் செய்து முயற்சி செய்தார். அது தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் 1991ல் பாஜக உத்தரபிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது. 1992ல் பாஜக, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனா ஆகியவை இணைந்து மசூதியை இடித்தனர். இதனால் மாபெரும் மத மோதல் ஏற்பட்டது. சுமார் 2000 பேர் உயிரிழந்தனர். 1998ல் பாஜக தலைமையில் கூட்டணி அரசு மத்தியில் அமைந்தது. மீண்டும் பிரச்சினையை எழுப்பி தங்களது உரிமையை நிலைநாட்ட விரும்பினர்.
பிரதமர் வாஜ்பாய், நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்கா மூலம் அயோத்தி பிரிவை ஆரம்பித்தார்.
2002ல் நடந்த உத்தரபிரதேச தேர்தலில் கோவில் கட்டுவது குறித்து உறுதியான உத்தரவாதம் அளிக்க பாஜக மறுத்துவிட்டது. 2003ல் ராமச்சந்திர பரமஹம்சர் மரணச் சடங்கில் கலந்துகொண்ட பிரதமர் வாஜ்பாய், நீதிமன்ற உத்தரவு படியோ அல்லது பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கூறினார்.
11 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2005 இல் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படை திருப்பி தாக்கியதில் 5 பேர் மரணம் அடைந்தனர். 2010இல் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
ஒன்று ராமர் லல்லா (இராமரின் குழந்தைப் பருவம்), சன்னி வக்பு வாரியம், நிர்மோதி அகாரா துறவிகள் அமைப்பு ஆகியவற்றிற்கு பிரித்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் போடப்பட்டன. 2019 ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு இறுதியாக ஒரு மனதாக இந்த வழக்கில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரில் கோவில் கட்டவும், அயோத்தியில் வேறு இடத்தில் இஸ்லாமியருக்கு இடம் ஒதுக்கவும் தீர்ப்பளிக்கப்பட்டது. மூன்று மாத காலத்தில் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்க உத்தரவிடப்பட்டது.
இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் கூட இறுதியில் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு பிறகு ராமன் அயோத்தி அடைந்தது போல ராமருக்கு வெற்றியாக தீர்ப்பு அமைந்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. அந்த வகை ஏற்பாடுகள் நடந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
என்ன செய்வார்களோ என்று எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் 175 பேர் மட்டுமே கலந்து கொள்ளும்படியான சூழல் இருந்தாலும், இந்திய மக்கள் உணர்வுபூர்வமான இந்த விழாவுக்காக காத்திருக்கிறார்கள்.