ஜெ.வை எதிர்த்த பாக்யராஜுக்கு இது தேவைதானா…? அரசியல் கணக்குகள் அவ்வளவும் ‘அவுட்’… கொந்தளிக்கும் அதிமுக தொண்டர்கள்!!

Author: Babu Lakshmanan
27 August 2022, 5:00 pm
Quick Share

கலையுலக வாரிசு…

1980-90களில் தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்த நடிகரும், இயக்குனருமான 70 வயது பாக்யராஜ் சினிமாவில் சாதித்துபோல, அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இன்னும் சொல்லப்போனால் அரசியலும் அவருக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

இத்தனைக்கும்1982-ல் வெளியான அவருடைய தூறல் நின்னு போச்சு படத்தை பார்த்துவிட்டு அன்றைய முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர், இயக்குனர் பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என்று அதிரடியாக அறிவித்து ஆச்சர்யப்படுத்தினார்.

ஏனென்றால் அதற்கு முன்பு வரை எம்ஜிஆர் அப்படி யாரையும் கூறியதில்லை.
இதனால் நடிகர் பாக்யராஜ் கற்பனைகளில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தார். எம்ஜிஆருக்காகவே அதிமுகவில் அதிக ஈடுபாடும் காட்டத் தொடங்கினார்.

ஆனால் 1987ல் எம்ஜிஆரின் திடீர் மறைவுக்கு பின்பு அரசியலை நோக்கி அவர் செய்த பயணமும், போட்ட கணக்குகளும் வீணாகித்தான் போனது. தமிழ் திரையுலகில் பலரும் பாராட்டும் ஹீரோவாக திகழ்ந்த அவர் அரசியலில் ஜீரோவாகிப் போனார்.

மோடிக்கு புகழாரம்

இதனால் கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக அரசியல் துறவறம் பூண்டிருந்த
பாக்யராஜ் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பாஜக விழாவில் ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது “மோடியைப் போன்ற ஒரு சுறுசுறுப்பான பிரதமரை நான் பார்த்ததில்லை. மோடியை விமர்சனம் செய்ய ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். அதற்கு செவி சாய்க்காமல் செல்ல வேண்டும். விமர்சனம் செய்பவர்களை, 3 மாத குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு அரசியல் கட்சிகள், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரின் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானார். இதனால் உடனடியாக அவர் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

“நான் பாஜக கிடையாது, என் மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி உள்ளேன். எனது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டு பாக்யராஜ் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

மீண்டும் அரசியல்

இந்த நிலையில் திடீரென அரசியல் மீது மீண்டும் அவருக்கு ஒரு ஆர்வம் வந்துவிட்டதுபோல் தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இயக்குனர் பாக்யராஜ் அவரை சந்தித்தும் பேசினார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இந்த கட்சியை எப்படி விட்டு விட்டு சென்றார்களோ, அதே போல அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். எம்ஜிஆர் உடல் நலமில்லாமல் இருந்தபோது அரசியல் மேடைகளில் பேசியுள்ளேன்.

இப்போது அவர்களுடைய பேரை காப்பாற்றவும், கட்சியைக் காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னாலான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை வலுப்படுத்துவார்கள். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசுவதற்கும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

கொந்தளிப்பு

அவர் இப்படி கூறியிருப்பது, அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

“எம்ஜிஆர் தன்னை கலையுலக வாரிசு என்று அறிவித்ததால் அவர் மீது எப்போதுமே பாக்யராஜுக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை மறுக்கவில்லை. அதேநேரம் அதிமுக பொதுச் செயலாளரும் மறைந்த முதலமைச்சருமான
புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன் என்று சொல்வதெல்லாம் கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை” என்று கூறும் அதிமுக தொண்டர்கள் அதற்கான காரணங்களையும் அடுக்கிக்கொண்டே போகின்றனர்.

“எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியை பாக்யராஜ் தீவிரமாக ஆதரித்தார். அதன் பின்னர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியையும் தொடங்கினார். அக்கட்சி தமிழகத்தில் எந்தத் தேர்தலையும் சந்திக்கவில்லை. ஆனால் 1991 கேரள சட்டப் பேரவை தேர்தலில் மட்டும் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் அதிக பட்சமாக 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். தனது கட்சி ஆரம்ப கட்டத்திலேயே படுதோல்வி கண்டதால் பாக்யராஜ் சொல்லாமல் கொள்ளாமல் கட்சியை கலைத்து விட்டார்.

பிறகு 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கருணாநிதியின் செயலுக்காக திமுகவை எதிர்த்து எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாக்யராஜ் திமுகவில் இணைந்தது, அனைவரையும் கொதிப்படைய வைத்தது.

வேடிக்கை

அப்போது முதலே ஜெயலலிதாவை அவர் மீண்டும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். ஏற்கனவே 1988-ல் ஜானகி அணியில் இருந்த பாக்யராஜ், புரட்சித்தலைவி அம்மா அவர்களை கேலி செய்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். திமுகவில் இணைந்த பிறகு அது இன்னும் இரு மடங்காகிப் போனது.பின்னர் திமுகவில் இருந்து ஓசையின்றி விலகி அரசியல் பார்வையாளராக இருந்து வந்த நிலையில் ஓபிஎஸ் அணியில் அவர் தற்போது இணைந்திருக்கிறார்.

அவருடைய திரைப் பட பாணியை ரசித்த அதிமுக தொண்டர்கள் அரசியல் தலைவராக அவரை ஒரு போதும் பார்க்கவில்லை. அதிமுகவின் கொள்கை என்ன என்பது பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.

எம்ஜிஆர் கூட அவரை அதிமுகவில் சேரும்படி ஒருபோதும் அழைப்பு விடுத்தது இல்லை. அதேபோல, தான் தொடங்கிய கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் பாக்யராஜ் மீண்டும் சேர முயன்றபோது அதற்கு ஜெயலலிதா சம்மதம் தெரிவிக்கவில்லை.

இப்போது அதிமுகவின் ஒற்றுமைக்காக பாடுபடப் போகிறேன், இதற்காக எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் பேசுவேன் என்று பாக்யராஜ் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதுவும் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல ஒற்றுமையை உருவாக்குவாராம். இதில் ஒரு நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ்சும், நடிகர் பாக்யராஜும் ஜெயலலிதாவுக்கு எதிராக பிரசாரம் தீவிர மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரும்தான் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் போல புதிய வேடம் போடுகிறார்கள். இதை அதிமுகவின் எந்த தொண்டனும் நம்பப் போவதில்லை.

அதிமுகவினரின் இதய கோவிலாக திகழும் கட்சியின் ராயாப்பேட்டை தலைமை அலுவலகத்தை கடந்த ஜூலை 11-ம் தேதி காலை 8.30 மணிக்கு ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்ததையும் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன் சொத்துப் பத்திரங்களை திருடிச் சென்றதையும் அத்தனை டிவி செய்தி சேனல்ளும் நேரடி ஒளிபரப்பு செய்ததை பாக்யராஜ் பார்க்காமல் போனது ஆச்சரியமான விஷயம்தான். இதன் பிறகும் அவர் ஓபிஎஸ்சுடன் வெட்கம் இல்லாமல் கை கோர்க்கிறார் என்றால் எதற்கோ அவர் பெருமளவில் விலை போய்விட்டார் என்ற எண்ணம்தான் அதிமுக தொண்டர்களிடம் ஏற்படும்.

மேலும் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருமே எம்ஜிஆர், ஜெயலலிதா போல திமுகவை எதிர்ப்பதில் உறுதி காட்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே அணிவகுத்து திரண்டு நிற்கின்றனர். ஓபிஎஸ் பக்கம் யாருமே இல்லாத நிலையில், நடிகர் பாக்யராஜ் யாருக்காக டீ ஆற்றப் போகிறார்? என்பது தெரியவில்லை.

ஒருவேளை ஓபிஎஸ், தான் தொடங்கும் கட்சியில் பாக்யராஜுக்கு முக்கிய பதவி ஏதும் கொடுக்க போகிறாரா?… ஏற்கனவே சசிகலா, டிடிவி தினகரன் என்று இருவர் அந்தப் பதவிகளுக்கு அடிப் போட்டு வரும் நிலையில், பாக்யராஜ் அங்கு எதை சாதிக்கப் போகிறார் என்பதும் புரியவில்லை.

இபிஎஸ்க்கே ஆதரவு

அதனால் இது பாக்யராஜ் போன்றவர்களுக்கு தேவையற்ற வேலை” என்று அந்த அதிமுக தொண்டர்கள் குமுறுகின்றனர்.

பாக்யராஜுக்கு நெருக்கமான திரையுலக பிரமுகர்கள் சிலர் கூறும்போது, “கடந்த சில ஆண்டுகளாகவே ஆதாயமின்றி எந்த செயலிலும் பாக்யராஜ் இறங்குவதில்லை.
அவருடைய மகன் சாந்தனுவும் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. பாக்யராஜுக்கும் இப்போது சினிமா மார்க்கெட்டில் வேல்யூ இல்லை என்பதால் வீட்டில் பொழுது போகாமல் சும்மாதான் இருக்கிறார். இருந்தாலும் தனது பெயரை வைத்து விளம்பர மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 25 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை சாமர்த்தியமாக வசூலித்து விடுகிறார்.

EPS - Updatenews360

ஓபிஎஸ்சிடம் ஒரு நாளைக்கு இதைவிட பல மடங்கு அவர் ஊதியம் எதிர்பார்க்கும் வாய்ப்பும் உள்ளது. அதனால் முடிந்த வரை முட்டி மோதிப் பார்ப்போம் என்று கருதி பாக்யராஜ் இந்த சமாதான முயற்சியில் இறங்க ஆர்வம் காட்டி இருக்கலாம். ஆனால் அவரும், ஓபிஎஸ்சும், ஜானகி அணியில் இருந்தபோது 1989 தேர்தலில் ஜெயலலிதாவை வசை பாடியவர்கள் என்பது பெரும் மைனஸ் பாயிண்ட். அதனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். மேலும் அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது என்பது அவர்கள் இருவருக்குமே நன்றாக தெரியும். அதனால் பாக்யராஜ், தான் அரசியலில் கண்ட தோல்வியை இதிலும் சந்திப்பார் என்பது உறுதி”என்று அவர்கள் கூறுகின்றனர்.

Views: - 427

0

0