துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வதை பாஜக படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை : வானதி சீனிவாசன் பொளேர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 October 2023, 1:41 pm
Vanathi - Updatenews360
Quick Share

துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வதை பாஜக படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை : வானதி சீனிவாசன் பொளேர்!!!

மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் பக்கம் பக்கமாக வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் ஒரு வார்த்தையில் கூட வாழ்த்துச் சொல்வதில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் நேற்று (21-10-2023) நடந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், “சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிளவுப்படுத்தி நாட்டை நாசம் செய்யும் ஒரு கூட்டத்திற்கு எதிராக நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் பாசிசத்தன்மை இந்தியாவுக்கே எதிரானது. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே எதிரானது” என்று நீட்டி முழக்கியிருக்கிறார்.

ஜாதி, மதத்தின் பெயரால் நாட்டை பிளப்பது யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிராக மட்டும் செயல்படும் கட்சி திமுக என்பது ஊரறிந்த ரகசியம். கடந்த ஒன்பதரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாட்டில் ஜாதி, மதத்தின் அடிப்படையில் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்பதை நிரூபிக்க முடியுமா? அடுத்த பாஜக தலைவர் யார் என்பதை யாராலும் கூற முடியாது. தகுதியும், திறமையும் வாய்ந்த யார் வேண்டுமானாலும் வர முடியும். ஆனால், அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் யார் என்பதை இப்போதே கூறிவிட முடியும். இதைவிட பாசிசம் இருக்க முடியுமா?

“அவர்களுக்கு இப்போது ஒரே வேலைதான். துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு பார்த்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார் என பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்குதான் எதிரிகளே தவிர, ஆன்மிகத்திற்கு எதிரிகள் அல்ல. கோயிலும் பக்தியும் அவரவர் உரிமை. விருப்பம். கோயிலையும், பக்தியையும் தங்களது அரசியலுக்கு சாதமாக மாற்ற பாஜக நினைக்கிறது” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவி திருமதி துர்கா அம்மையார் கோயில்களுக்குச் சொல்வதை யாரும் எதிர்க்கவில்லை. யார் கோயிலுக்குச் சென்றாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். துர்கா அம்மையார் கோயில்களுக்குச் செல்வதை பாஜகவினர் யாரும் படம் எடுக்கவில்லை. அவருடன் செல்லும் திமுகவினர்தான் படம் எடுத்து பரப்புகின்றனர்.

காரணம் திமுகவினரின் இந்து மத விரோதச் செயல்களால் இந்துக்களின் ஓட்டு பறிபோய் விடும் என்ற அச்சம் காரணமாக, துர்கா அம்மையார் கோயில்களுக்குச் செல்வதை படம் எடுத்து திமுகவினரே பரப்புகின்றனர் என்று நினைக்கிறேன். ஏனெனில் 10 ஆண்டு காலம் அதிகாரத்தை இழந்ததும், திமுகவில் இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் இந்துக்கள் எனக்கூறியவர்தான் ஸ்டாலின் அவர்கள்.

மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் பக்கம் பக்கமாக வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் ஒரு வார்த்தையில் கூட வாழ்த்துச் சொல்வதில்லை. வாக்குவங்கி அரசியலுக்காக கோவை குண்டுவெடிப்பு கைதிகளைக்கூட விடுதலை செய் துணிந்துள்ள, இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லககூட மனமில்லாத அளவுக்கு வெறுப்பு கொண்ட ஒருவர், பாஜகவைப் பார்த்து மதவாத கட்சி, பாசிச கட்சி என்பது வேடிக்கையாக உள்ளது.

ஸ்டாலினின் நேற்றைய (21-10-2023) பேச்சில் எங்கே இந்துக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்களோ, அவர்களின் வாக்குகள் கிடைக்காமல் போய் விடுமோ என்ற பதற்றமும், அச்சமும் தெரிகிறது. இனியும் இந்துக்களை ஏமாற்ற முடியாது.

திமுகவின் போலி நாடகங்களை, வார்த்தை ஜாலங்களை தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.முதலமைச்சர் அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர் என்றால், ஆன்மிகத்திற்கு எதிரி அல்ல என்று அவர் பேசியது உண்மை என்றால், வரும் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளிக்கு வாழ்த்து கூற வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Views: - 207

1

0