பாஜக ஆபிஸ்லதான் இருப்பேன்… 6 மணிநேரம் டைம் இருக்கு.. முடிந்தால் கைது செய்யுங்க பார்ப்போம் : திமுகவுக்கு அண்ணாமலை சவால்…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
29 March 2022, 2:09 pm
Quick Share

சென்னை : முடிந்தால் தன்னை கைது செய்ய பார்க்கட்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

4 நாள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்தப் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். அதாவது, முதலீடுகளை ஈர்க்கச் சென்றாரா..? அல்லது முதலீடு செய்வதற்காக சென்றாரா..? என்று அவர் கூறியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் பயணம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்பி ஆர்எஸ் பாரதி ரூ.100 கோடி கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸ் இன்று காலை அண்ணாமலைக்கு கிடைக்கப் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறாக பேசிய சேலம் எடப்பாடி சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசியதாவது :- நான் பேசிய அனைத்திற்கும் ஆதாரம் இருக்கிறது. திமுக அனுப்பிய நோட்டீஸ் இன்று காலைதான் எனக்கு கிடைத்தது. எனவே, நீதிமன்றத்தை சந்திக்க தயாராக உள்ளேன். அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கி உள்ளேன் என குற்றம்சாட்டுகின்றனர்.

நான் பாஜக அலுவலகத்தில்தான் இருப்பேன். இன்னும் 6 மணிநேரம் உள்ளது. முடிந்தால் வந்து என்னை கைது செய்து பாருங்கள். போலீஸ் படையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இனி நீங்கள் கூறுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆயிரம் மானநஷ்ட ஈடு வழக்கு போட்டாலும் சந்திக்க இந்த விவசாய அண்ணாமலை தயாராக உள்ளேன். பிஜிஆர் நிறுவனத்தால் அரசுக்கு நட்டம் தான் ஏற்படும் என தெரிந்தும் அந்த நிறுவனத்திற்கு தான் டேன்ஜட்கோ அனுமதி வழங்க வேண்டுமென முதல்வர் கூறியுள்ளார். என்னிடம் உள்ள ஆதாரங்களில் ஒன்று தவறு என்று நிதியமைச்சர் சொல்லட்டும். நான் இன்று மாலை வரை திநகரிலுள்ள கமலாலயத்தில் தான் இருப்பேன். காவல்துறை என்னை வந்து கைது செய்யட்டும். ஆர்.எஸ் பாரதி அறிவே இல்லை, எனக் கூறினார்.

Views: - 820

0

0