ஆ.ராசா இப்ப மாட்டிட்டாரு… இன்னும் 11 திமுக அமைச்சர்கள் இருக்காங்க ; திமுக மன்னிப்பு கேட்ட ஆகனும் ; அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
10 October 2023, 9:37 pm
Quick Share

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய திமுக எம்பியுமான ஆ.ராசா மீது ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது.

இது குறித்து அமலாக்கத்துறை தனது X தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 2002 விதிகளின்படி, முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கையகப்படுத்தப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், ரூ.1000 கோடியளவிற்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்றொரு திமுக எம்பியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது திமுகவுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 2011 ஆம் ஆண்டில் டைம் இதழ், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களின் பட்டியலில் ஆ.ராசாவின் பெயரையும் இணைத்து வெளியிட்டது. அதில் திமுகவின் பல அமைச்சர்கள் ஊழல்கள் செய்திருந்தாலும், அவர்களின் பெயர் இடம்பெறாதது அவர்களின் அதிர்ஷ்டமாகும்.

2004-2007 க்கு இடையில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஏ.ராஜா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்காக சட்டவிரோத ஆதாயம் பெற்றதாகவும் அமலாக்க இயக்குனரகம் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

திமுக ஊழல்வாதிகளின் கூடாரமாகத் தொடர்கிறது. 11 திமுக அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் புகார்கள் உள்ளன. அதோடு, நீதிமன்றத்தில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், பலர் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்ததற்காக தமிழக மக்களிடம் திமுக தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 240

0

0