ஊழல் திமுக அரசின் அவலங்கள்… வெளிச்சம் போட்டு காட்டும் பாஜக ; பீதியில் அந்த இரு அமைச்சர்கள் ; அண்ணாமலை ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 12:09 pm
Quick Share

விருதுநகர்:விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினர் இரவோடு இரவாக அகற்றிய சம்பவத்திற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பாஜக அலுவலகம். இந்த அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியின் நிறைவாக இக்கட்சி அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலையை நேற்று காலை நிறுவி பூர்வாங்க பணிகளை பணியாளர்கள் செய்து வந்தனர். மேலும், வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் , என் மக்கள் பாதயாத்திரை பயணமும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், விருதுநகர் தாசில்தார் மற்றும் கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் காவல்துறையினருடன் வந்து அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளீர்கள். எனவே, உடனடியாக இதை அகற்ற வேண்டும் என்றனர். இதை கேட்டதும் சிலையை அகற்ற முடியாது, எங்கள் பட்டா நிலத்தில் தான் உள்ளது என பாஜகவினர் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜக மாநில செயலாளரும், கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி நிகழ்விடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், சிலையை மூடி வைப்பது என்றும், நாளை முறைப்படி அனுமதி கேட்பது என்றும் முடிவெடுக்கப்பட்டு, சிலை துணியால் மூடப்பட்டது. காவல் துறை உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் காவல்துறை குவிக்கப்பட்டு பாஜக அலுவலக கேட்டை காவல்த்துறையினர் நவீன இயந்திரம் கொண்டு அறுத்து திறந்து, சுமைதூக்கும் தொழிலாளர்களை கொண்டு பாரதமாதா சிலையை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி, வாகனத்தில் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், “விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை.
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!, என தெரிவித்துள்ளார்.

Views: - 253

0

0