இது முறையானதல்ல அல்ல… இன்னும் இயல்பு வாழ்க்கையே திரும்புல அதுக்குள்ள தேர்வா..? தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!!

Author: Babu Lakshmanan
1 January 2024, 7:29 pm
annamalai---stalin--updatenews360
Quick Share

தென்‌ மாவட்டத்தில்‌ உள்ள வெள்ள பாதிப்புகளைக்‌ கருத்தில்‌ கொண்டு ஒருங்கிணைந்த பொறியாளர்‌ பணிக்கான எழுத்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ (TNPSC)ஒருங்கிணைந்த பொறியாளர்‌ பணிக்கான எழுத்து தேர்வு, வரும்‌ ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில்‌ நடைபெறும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, கனமழையாலும்‌ வெள்ளத்தாலும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்‌ தென்காசி ஆகிய தென்மாவட்டங்கள்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டுள்ளதும்‌, இம்மாவட்டங்களில்‌ இயல்பு நிலை இன்னும்‌ முற்றிலுமாகத்‌ திரும்பவில்லை என்பதும்‌ நாம்‌ அனைவரும்‌ அறிந்ததே.

இம்மாவட்டங்களில்‌ உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள்‌, தமிழக அரசுப்‌ பணித்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்‌. கடந்த மூன்று வார காலமாக, அவர்கள்‌ கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கும்‌ இந்த நிலையில்‌, குறிப்பிட்ட தேர்வுகளை நடத்துவது முறையானதாக இருக்காது என்பதோடு, தென்மாவட்ட இளைஞர்களுக்கு அநீதி இழைப்பதாகவும்‌ அமையும்‌.

ஒருங்கிணைந்த பொறியாளர்‌ பணிக்கான தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு பலமுறை பொதுமக்கள்‌ கோரிக்கை விடுத்தும்‌, இதுவரை அது குறித்த எந்த நடவடிக்கையும்‌ எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதே நேரம்‌, தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ 07.01.2024 அன்று நடத்தவிருந்த பட்டதாரி ஆசிரியர்‌ வட்டார வளமைய
ஆசிரியர்‌ பணிக்கான தேர்வு, தென்‌ மாவட்டத்தில்‌ உள்ள வெள்ள பாதிப்புகளைக்‌ கருத்தில்‌ கொண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ ஒருங்கிணைந்த பொறியாளர்‌ பணிக்கான எழுத்துத்‌ தேர்வையும்‌ மறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்‌ என்றும்‌, வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட இளைஞர்கள்‌ தேர்வுக்குத்‌ தயாராக முறையான வாய்ப்பு வழங்க வேண்டும்‌ என்றும்‌ தமிழக அரசை, பாஜக சார்பாக கேட்டுக்‌ கொள்கிறேன்‌, என தெரிவித்துள்ளார்.

Views: - 258

0

0