கல்லூரி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு.. இதுதான் சட்டம் ஒழுங்கு காக்கும் லட்சணமா? தலைநகரில் தலைகுனிவு : இபிஎஸ் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 4:13 pm
EPs Stalin - Updatenews360
Quick Share

கல்லூரி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு.. இதுதான் சட்டம் ஒழுங்கு காக்கும் லட்சணமா? தலைநகரில் தலைகுனிவு : இபிஎஸ் விமர்சனம்!!

சென்னை கிண்டி – வேளச்சேரியில் அமைந்துள்ளது குருநானக் கல்லூரி. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

குருநானக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரியவரக்ள் என்ற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அடிக்கடி இரு வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே இந்த சண்டை நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் இன்று கல்லூரியில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஒரு தரப்பு மாணவர்கள் நாட்டு வெடி குண்டுகளை வீசியதாக சொல்லப்படுகிறது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் கல்லூரியில் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக சொல்லப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சியினர் திமுக அரசை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதன் லட்சணம் இது! இதைவிட இந்த அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்?

இந்த சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த மோதலில் ஈடுபட்டோர் மாணவர்கள் தானா அல்லது வேறு ஏதும் பின்னனியில் உள்ளவர்களா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

Views: - 210

0

0