இதுக்கு மேலயும் தமிழகம் சீர்கெட முடியாது… சென்னையில் கல்லூரி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு ; அண்ணாமலை கடும் கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
21 August 2023, 4:59 pm
Quick Share

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி – வேளச்சேரி சாலையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இருவேறு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குள் மோதல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் மாணவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், ஒரு தரப்பினர் நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாச்சாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்டவை தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதற்கு மேலும் சீர்கெட முடியாது.

உடனடியாக இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெடிகுண்டு கலாச்சாரத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 203

0

0