பாமக இண்டியா கூட்டணிக்குள் வரலாமா?…வேணாமா?…திருமா VS கார்த்தி சிதம்பரம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 10:03 pm
PMK
Quick Share

பாமக இண்டியா கூட்டணிக்குள் வரலாமா?…வேணாமா?…திருமா VS கார்த்தி சிதம்பரம்!

முதலமைச்சர் ஸ்டாலினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிக அண்மையில் சென்னை கோட்டையில் சந்தித்து பேசியது முதலே திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக விரும்புவதாக வெளியான தகவலுக்கு பின்பு, விசிக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவியாய் தவிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என்று கடந்த ஓராண்டாக திருமாவளவன் கூறி வரும் நிலையில் அதற்கு பங்கம் விளைவிப்பது போல் இந்த தகவல் அமைந்துவிட்டதுதான்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 28 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணியில் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்கும், காங்கிரஸ், பாமகவின் வரவை ஏற்றுக்கொள்வது போல கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் இது குறித்து வாய் திறக்காத நிலையில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பியான கார்த்தி சிதம்பரம் இதை மனம் திறந்து வரவேற்று இருக்கிறார்.

அது மட்டுமல்ல இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே கூடாது என்று திருமாவளவன் தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கும் பதில் அளிப்பதுபோல் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்து விசிகவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டுள்ளார்.

மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாநில காங்கிரஸ் தலைவர் என்பது நியமன பதவி. எப்போது கார்கே நினைக்கிறாரோ, அப்போது நியமனம் செய்வார். வாக்குப்பதிவு எந்திரத்தில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது பரிசோதனை முறையில் 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதை அதிகப்படுத்தவேண்டும்.

மேலும் ஒரே ஒரு தேர்தலிலாவது அனைத்து வாக்குச் வாவடிகளின் விவிபேட் வாக்குகளையும் தேர்தல் ஆணையம் எண்ணிக் காட்டினாலே வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகங்கள் போய்விடும். இந்தி தேசிய மொழி அல்ல. இந்தி தெரியாதவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் அதை மொழிபெயர்க்க வேண்டும்.

தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர உள்ளன. தொகுதிப் பங்கீட்டில் இந்த முறை காங்கிரசுக்கு மனவருத்தம் கண்டிப்பாக இருக்காது. புதிய கட்சிகள் வந்தால் எங்களுக்குத் தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது. இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் கிடையாது. கூட்டணி வலுவாக இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்”என்று குறிப்பிட்டார்.

கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்வதில் இருந்து திமுக கூட்டணிக்குள் பாமகவும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் வர இருப்பதைத்தான் சூசகமாக கோடிட்டு காட்டுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வரும்போது காங்கிரஸுக்கு தொகுதிகள் குறையவும் வாய்ப்பு உள்ளது, இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும் கார்த்தி சிதம்பரம் ஒப்புக்கொள்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதால் வேறு எந்தவொரு கட்சிக்கும் மன வருத்தம் கிடையாது என அவர் சொல்லவே இல்லை என்பதுதான். இதன் மூலம் பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக தலைவர் திருமாவளவன் அதை ஏற்றுக் கொள்வார். ஒருபோதும் மறுக்க மாட்டார் என்ற தகவலும் மறைமுகமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை திருமாவளவன் நேரடியாக சொன்னால் திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படலாம் என்று கருதியோ, என்னவோ திமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர் மூலம் விசிக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.

பெயரை வெளியிட விரும்பாத அந்த நிர்வாகிகள் கூறுவது இதுதான்.”எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரை திமுக., காங்கிரஸ் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள கட்சிகள்தான் இந்த தேர்தலிலும் தொடரும். இதில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி மட்டும் எங்களது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதற்கு பதில் கமல்ஹாசன் கட்சி இங்கு கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

பாமகவை பொறுத்தவரை எங்களுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கும் அளவுக்கு இங்கு ‘சீட்’ இல்லை. அப்படியே பாமகவை கூட்டணியில் சேர்ப்பதாக இருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதை ஏற்குமா? என்பது சந்தேகம்தான்.

வட மாவட்டங்களில் எதிரும் புதிருமாக உள்ள இந்த இரு கட்சிகளின் தொண்டர்களும் தேர்தலில் ஒருங்கிணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை. இருவரும் ஒதுங்கிக் கொள்ளவே செய்வார்கள் என்பதுதான் எதார்த்த நிலை.

ஏனென்றால் பாமகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பல்வேறு முரண்பாடுகள் உண்டு. பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பார்களா? என்பதும் தெரியாது. நாங்களும் விசிகவை இழக்க விரும்பவில்லை.

பாமகவை பொறுத்த வரை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தான் விரும்புவார்கள். ஆனால் அந்த கூட்டணியில் அதிமுக இல்லை என்பதால் பா.ஜனதா கூட்டணி இங்கு வெற்றி பெறுமா? என்ற ஐயப்பாடு அவர்களுக்கு உண்டு. அதனால் பாமக இந்த தேர்தலில் எந்த பக்கம் செல்லும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

எங்கள் கூட்டணியை பொறுத்த வரை இந்தந்த கட்சிகள் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ளோம். அதன்படிதான் கூட்டணி இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள் என்பதையும் கூட ஓரளவு முடிவு செய்துவிட்டோம்.

எனவே தமிழகத்தில் எங்கள் கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிடும் தொகுதிகள் வேண்டுமானால் மாறலாம். எண்ணிக்கை மாற வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டனர்.

திமுகவின் மூத்த நிர்வாகிகள் இப்படி விசிகவை விட்டுக் கொடுக்காமல் பேசினாலும் கூட அமைச்சர்கள் துரைமுருகன், எம் ஆர் கே பன்னீர்செல்வம் இருவரும் கட்சியின் தலைவரான ஸ்டாலினிடம் பாமகவை சேர்த்துக் கொள்வதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு 39 தொகுதிகளிலும் வெற்றியை பெற்று தரும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாகவே அடிபடுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “2021ல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மாநகர சாதாரண அரசு பஸ்களில், மகளிர்க்கு இலவச பயணம், ஒரு கோடியே 13 லட்சம் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை ஆகிய இரண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்ட, குறிப்பிட்டு சொல்லக் கூடிய வாக்குறுதிகளாக இருக்கின்றன.

அதிலும் மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதில் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிபந்தனையை விதித்து சுமார் 90 லட்சம் குடும்பத் தலைவிகளை திமுக அரசு பரிதவிப்புக்கும் உள்ளாக்கி விட்டது.

இதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இந்த இரண்டும் தங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அமைச்சர்களில் பலர் பயப்படவும் செய்கின்றனர்.

அதேபோல கடந்த டிசம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களிலும், நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் வாக்குகளும் திமுகவிற்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் அதி கன மழை கொட்டி தீர்த்ததால் ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகள், விளிம்பு நிலை மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என பல லட்சம் பேர் தங்களது விலை மதிப்புமிக்க உடமைகளை பறிகொடுத்ததோடு வாழ்வாதாரத்தையும் அடியோடு இழந்து தவித்தும் வருகின்றனர்.

இதனால் 16 நாடாளுமன்றத் தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கு வெற்றி என்பது மதில் மேல் பூனையாகி விட்டது. தவிர கொங்கு மண்டலத்திலும் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளால் 11 தொகுதிகளில் திமுகவுக்கு கடும் போட்டியும் உருவாகி உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்தே திமுக தலைமை பாமகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புகிறது. திருமாவளவன் அதிருப்தி அடைந்தாலும் அவரை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம் என்றும் நம்புகிறது.

அதேநேரம் பாமகவை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒரே நேரத்தில் அதிமுகவின் பலத்திற்கும், தமிழக பாஜக கூட்டணியின் வலிமைக்கும் செக் வைக்க முடியும் என்றும் இதன் மூலம் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் எளிதாக கைப்பற்றி விடலாம் எனவும் அறிவாலயம் தேர்தல் கணக்கு போடுகிறது. எனவே விசிக தலைவர் திருமாவளவனை காட்டிலும், கார்த்தி சிதம்பரம் தெரிவிக்கும் கருத்துகளே திமுக கூட்டணியில் அரங்கேறுவதற்கான வாய்ப்பு தென்படுகிறது” என்று
அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பாமக கூட்டணி விஷயத்தில் ஜெயிக்கப் போவது திருமாவா?… கார்த்தி சிதம்பரமா? என்பது இந்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும்.

Views: - 179

0

0