மத்திய அரசு சார்பில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி.. இப்படியொரு தலைவரை இனி பார்க்க முடியாது ; நிர்மலா சீதாராமன் புகழஞ்சலி!!

Author: Babu Lakshmanan
29 December 2023, 1:50 pm
Quick Share

கஷ்டத்தை உணர்ந்த மனிதநேயமிக்க இதுபோன்ற அரசியல்வாதியை இனி பார்ப்பது அரிது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது. இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்னர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடலுக்கு நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பார்த்திபன், ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுந்தர்.சி, பாக்கியராஜ், சாந்தனு மற்றும் நடிகை குஷ்பூ, நளினி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில், மத்திய அரசின் சார்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜயகாந்த் மறைவு செய்தியை கேட்ட பிரதமர் மோடி, மத்திய அரசு சார்பாக நாமும் அந்த துக்க நிகழ்வில் பங்கேற்க வேண்டும் எனக் கூறினார். பிரதமர் மோடியின் சார்பாக மலர் வளையம் சமர்பித்ததாகவும், இளகிய மனம் கொண்ட விஜயகாந்த், தனக்கு கிடைக்கும் வசதிகள் தன்னுடன் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் என்று கூறினார்.

மேலும், கஷ்டத்தை உணர்ந்த மனிதநேயமிக்க இதுபோன்ற அரசியல்வாதியை இனி பார்ப்பது அரிது என்று கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றும், தனது பணத்தால் மற்றவர்களுக்கு உதவும் அரசியல்வாதியை இழந்துவிட்டோம் என்று கூறினார்.

Views: - 310

0

0