கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம்… வழக்கில் பின்னடைவு… அப்செட்டில் செந்தில் பாலாஜி!!

Author: Babu Lakshmanan
16 February 2024, 11:26 am
senthil-balaji-updatenews360
Quick Share

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, அண்மையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது, அமைச்சர் பதவியில் இருந்த போது அதிகாரத்தை பயன்படுத்தி, சாட்சியங்களை கலைக்க நேரிடும் என்ற அமலாக்கத்துறையின் முறையீடு, தற்போது செல்லாததாகி விட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஒரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அவசர வழக்காக விசாரிக்கக்கோரிய செந்தில்பாலாஜி தரப்பின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்படும் எனக் கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. இதனை கேட்டு அதிர்ந்து போன செந்தில் பாலாஜி தரப்பு,
தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விடும் என்று முறையிட்டனர். ஆனால், அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

மேலும், ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை பிப்.,19க்கு பதிலாக பிப்.,21ல் விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் கோரிக்கை வைத்தார். மூத்த வழக்கறிஞரின் முறையீட்டை ஏற்று பிப்.,21ல் விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒப்புதல் அளித்துள்ளார்.

Views: - 230

0

0