தமிழகத்தில் ஆங்காங்கே இஸ்லாமிய அமைப்புகள் திடீர் போராட்டம்… சென்னையில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம்…!

14 February 2020, 11:42 pm
Chennai Protest updatenews360
Quick Share

சென்னையில் இஸ்லாமிய அமைப்பினர் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இரவில் இஸ்லாமிய அமைப்புகள் திடீரென போராட்டத்தில் இறங்கினர். இதனால், பரபரப்பு நிலவி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய அமைப்புகள் சில, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஆனால், இதை இஸ்லாமிய அமைப்புகள் ஏற்கவில்லை. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். உடனே,  கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கமிட்டனர். பதற்றமான சூழல் நிலவியதை பயன்படுத்தி, சிலர் போலீசார் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், நிலமை மேலும் மோசமடைந்தது. கல்வீச்சில் காவல் இணை ஆணையர் விஜயகுமாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல், போராட்டக்காரர்களை கலைந்து போகச்செய்ய போலீசார் அறிவுறுத்தியும் கேட்கவில்லை. இதையடுத்து லேசாக தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, அப்பகுதியில் ஏராளமான இஸ்லாமியர்கள் வந்து குழுமியதால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தகவல் அறிந்து காவல் ஆணையர் விஸ்வநாதன், இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சு நடத்தினார். இது இரவிலும் தொடர்ந்தது.


இதற்கிடையே, சென்னை  கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். சென்னை நகரிலும் பல இடங்களில் ஆங்காங்கே மறியலில் ஈடுபட முயன்றதால், கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

இதேபோல் கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தஞ்சை, சேலம், திருச்சி என பல இடங்களிலும் இரவு நேரத்தில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உருவானது. திடீர் போராட்டத்தால் பல இடங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியது.

Leave a Reply