கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கடலூரில் முதலமைச்சர் நாளை ஆய்வு
26 August 2020, 10:46 pmசென்னை: கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆய்வு செய்கிறார். மேலும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர், 22 புதிய திட்டப்பணிகளை, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டுகிறார். 25 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 33 திட்டப் பணிகளை துவக்கி வைக்கிறார்.
அதையடுத்து அன்று மதியம் நாகப்பட்டின மாவட்டத்திலும் முதலமைச்சர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து அன்று மதியம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.