திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்!!!

27 January 2021, 2:45 pm
DMK cover - updatenews360
Quick Share

2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார். அப்போதெல்லாம் சட்டப்பேரவையில் பேசும்போது உங்களது ஆட்சி நீடிக்காது. இன்னும் 4 மாதங்களில் கவிழ்ந்துவிடும், ஆறு மாதங்களில் காணாமல் போய்விடும் என்று பூச்சாண்டி காட்டுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக ஏற்றுக்கொள்வதில் எனக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை என்பதுபோலவே அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருந்தாலும் கூட தன்னால் முதல்வர் பதவியை அடைய முடியவில்லையே? என்ற ஏக்கமும் சில நேரங்களில் அவருடைய முகத்தில் பிரதிபலிக்கும்.

EPS - stalin - updatenews360

குறிப்பாக 2017, 2018-ம் ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் ஒரு பொருட்டாகவே மதித்தது கிடையாது என்றும் கூறப்படுவது உண்டு. முதல்வர் விடுக்கும் அறிக்கைகள், பேட்டிகள் தொடர்பாக திமுகவின் மூத்த தலைவர்களை பதிலளிக்க வைப்பதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது.
குறிப்பாக துரைமுருகன், டி. ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி, ஆ.ராசா என்று வரிசை கட்டி காட்டமாக விமர்சிப்பார்கள்.

அதாவது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் எனக்கு இணையானவர் அல்ல. அவரை விட நான் ஒருபடி மேல் என்பதுபோல் ஸ்டாலினின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. உங்களுக்கெல்லாம் நான் பதிலளிக்க வேண்டுமா? என்ற தோரணையும் அவரிடம் இருந்தது. அதனால் பெரும்பாலான நேரங்களில் மூத்த தலைவர்களே ஸ்டாலினுக்கு மாற்றாக பதில் அளித்து வந்ததையும் அப்போது காண முடிந்தது.

ஆனால் 2019-ம் ஆண்டு மே மாதம் 22 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைத்த பின்பு நிலைமை அப்படியே மாறியது. ஆட்சி ‘ஸ்டெடி’ ஆனதும் முதல்வரின் வேகம் பலமடங்கு அதிகரித்தது. சட்டப் பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவருடைய கட்சி எம்எல்ஏக்களும் ஏதாவது குதர்க்கமாக கேள்வி எழுப்பினால், அதற்கு தகுந்த பதிலடியும் கொடுக்க ஆரம்பித்தார். அந்த பதில்களில் கிடுக்குப்பிடியும் இருந்தது.

இந்த நேரத்தில்தான் குறிப்புகள், புள்ளி விவரங்கள் எழுதிவைத்த துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியாது என்கிற சூழலும் உருவானது. அதற்கு முன்புவரை செய்தியாளர்கள் எந்த கேள்வி கேட்டாலும், எப்படிக் கேட்டாலும் அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லத் திணறியதே கிடையாது. ஆனால், அவரை இன்று மடக்கும் விதமாக யாரும் கேள்வி கேட்க முடியாத நிலை எழுந்துள்ளது.

stalin campaign - updatenews360

அப்படியே குறிப்புகளை எழுதிவைத்து வாசித்தாலும் அதிலும் அவரிடம் தடுமாற்றமும் ஏற்படுவதை காணமுடிகிறது.
தப்பும் தவறுமாக புள்ளிவிவரங்களை கூறுகிறார். அதனால்தான் எடப்பாடியார் சில வாரங்களுக்கு முன்பு துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வரத் தயாரா? என்று ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

ஆனால் சில திமுக ஆதரவு ஊடகங்கள் இதில் துண்டு சீட்டு என்கிற வார்த்தையை சாமர்த்தியமாக நீக்கிவிட்டன. இதனால் நேரடி விவாதத்திற்கு வரத் தயாரா? என்ற சாதாரண கேள்வி போல் அது அமைந்துபோனது. அதே நேரம் இப்பிரச்சனையை ஸ்டாலின் வேறுவிதமாக மடைமாற்றம் செய்தார். அதாவது இரண்டு முன் நிபந்தனைகளை வைத்தார். அது நேரடி விவாதத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில் அமைந்திருந்தது.

இன்னொரு பக்கம் ஆ.ராசா எம்.பி. எடப்பாடி பழனிசாமி என்னுடன் விவாதிக்க தயாரா? என்று சம்மன் இன்றி ஆஜராவதுபோல் கேள்வி எழுப்பினார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூட ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி என்னோடு வந்து மோதட்டும் என்று ஆவேசமாக கொக்கரித்தார்.

ஆனால் தேவை இல்லாமல் இவர்கள் குறுக்கே வந்தது ஸ்டாலினுக்கு பின்னடைவாகத்தான் அமைந்தது. ஏனென்றால் ஸ்டாலினால் பேச முடியாது என்கிற காரணத்தால்தான் இவர்கள் களத்துக்கு வருகிறார்கள் என்று இவர்களின் மோதலை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு நினைக்க தோன்றியது. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பிரச்சனையை விடுவதாக இல்லை. மீண்டும் ஸ்டாலின் மீது துண்டுச்சீட்டு அஸ்திரத்தை ஏவினார்.

திமுக தலைவர்களிடம் பொதுவாகவே ஒரு குணாதிசயம் உண்டு.
தங்களுக்கு எதிராக ஏதாவது வலுவான கேள்விகள் முன் வைக்கப்பட்டால் அதற்கு பதில் அளிக்காமல் சாதுர்யமாக நழுவி விடுவார்கள். அல்லது அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதுபோல்தான் இந்த முறை எடப்பாடி பழனிசாமி துண்டுச் சீட்டு இல்லாமல் விவாதம் நடத்த வரத் தயாரா? என்று கேட்டதற்கு திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. அப்படியே கமுக்கம் ஆகி விட்டனர்.

இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு திருத்தணி முருகன் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட வெள்ளி வேல் ஒன்றை கையில் ஏந்தி ஸ்டாலின் அமர்க்களமாக போஸ் கொடுத்தார். அவருடைய அந்த கெட்டப் இன்றும் சமூக ஊடங்களில் பரவிய வண்ணம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில் “திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல. திமுக ஆட்சி காலத்தின் போதுதான் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரபல கோவில்களுக்கு தங்கத்தேர், தங்க கோபுரம் வடிவமைத்து கொடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்து மத சம்பிரதாயங்களை ஸ்டாலின் கேலி செய்தே பேசி வந்தார். அவருடைய நடவடிக்கைகளும் நாத்திக வாதம் பேசுவதுபோல் அமைந்திருந்தது. இதனால்தான் கருப்பர் கூட்டம் போன்ற அமைப்புகள் இந்து மத தெய்வங்களை அவமதித்து வீடியோக்கள் வெளியிட்டபோது அவர் அதை கண்டிக்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை.

இப்படியே போனால் வரும் தேர்தலில் இந்துக்கள் ஓட்டு கிடைப்பது கடினம் என்று திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இடித்துக் கூறிய பின்புதான் ஸ்டாலின் விழித்துக்கொண்டார். அதன் எதிரொலியாகவே அவர் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெள்ளி வேலுடன் போஸ் கொடுத்தது என்கிறார்கள். இப்படி இந்துக்களை குறிவைத்து ஓட்டுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் தடாலடியாக வேலை கையில் எடுத்திருப்பது அவர் மீதான நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிட வைத்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

EPS - updatenews360

ஸ்டாலினின் இந்த திடீர் வேஷத்துக்கு பதிலடி கொடுப்பது போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைமுக சவால் ஒன்றை குறிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டி கிராமத்தில் நடந்த மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் முதல்வர் கலந்துகொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவர் வேத பண்டிதர்களுடன் சேர்ந்து கோபுரத்தின் உச்சிக்கும் சென்றார். அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை எந்த முதல்வரும் கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று இருப்பார்களா? என்பது சந்தேகமே.

அந்த வகையில் தான் ஒரு முழுமையான ஆன்மீகவாதி என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். இதைத்தான் அவர் ஸ்டாலினுக்கு விடுத்த மறைமுக சவாலாக ஆன்மிகவாதிகள் பார்க்கிறார்கள்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது “முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லா மதங்களையும் சமமாகவே பாவிக்கிறார். அதேநேரம் தான் சார்ந்த இந்து மதத்தை அதிகமாக நேசிக்கிறார். அதன் வெளிப்பாடுதான் கோவில் கோபுரத்தின் உச்சிக்கு அவர் சென்றது.
ஸ்டாலினுக்கும் இந்து மத சடங்குகள், சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை இருந்தால், அவரும் ஏதாவது ஒரு கோவில் குடமுழுக்கு விழாவில் இதுபோல் கோபுரத்தின் உச்சிக்கு சென்று பூஜையில் கலந்து கொள்ளட்டும். அப்போதுதான் அவர் இந்து மதத்தை உண்மையிலேயே நேசிக்கிறார் என்பது உறுதிப்படும். இப்படி வேல் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுடன் நின்று விடக் கூடாது.

CM edappadi palanisamy 1 - updatenews360

மேலும் திமுக ஆட்சி காலத்தில் 50 மேற்பட்ட கோவில்களுக்கு தங்கத்தேர், தங்க கோபுரம் செய்யப்பட்டது பற்றி
ஸ்டாலின் பெருமையாகக் கூறிக் கொள்கிறார். 2006 முதல் 2011 திமுக ஆட்சியில் இருந்தபோது இதற்காக டன் கணக்கில் தங்கம் வாங்கப்பட்டது. இதில் 200 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அப்போதைய மதிப்பு எப்படியும் சுமார் 35 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும்.

அதேபோல் இந்த தங்கத்தேர், தங்க கோபுரங்கள் எல்லாமே
எத்தனை காரட்டில் செய்யப்பட்டு இருக்கும் என்பதும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஏனென்றால் தங்க கோபுரத்தையும், தங்கத் தேரையும் பக்தர்கள் புனித கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்களே தவிர ஒருபோதும் அதை உரசிப்பார்க்க நினைக்க மாட்டார்கள்.

பக்தி என்பது வெறும் பகல் வேஷமாக இருக்கக் கூடாது. அது தானாகவே அடி மனதில் இருந்து வரவேண்டும். அப்போதுதான் ஸ்டாலின் மீது நம்பிக்கை ஏற்படும். இனி அவருக்கு யாராவது குங்குமம் பூசினாலோ, திருநீறு அணிவித்தாலோ அதை அழிக்கக் கூடாது”என்று வேண்டுகோள் விடுத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த நேரடி சவாலுக்கே வரத் தயங்கும் ஸ்டாலின் இந்த மறைமுக சவாலுக்கெல்லாம் ஒப்புக் கொள்வாரா என்ன? என்றும் இந்த ஆன்மிவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர். இவர்களின் கேள்வியிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.

Views: - 0

0

0