கடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் என்ன தப்பு.. முதலமைச்சர் பழனிசாமி அதிரடி விளக்கம்..!!
26 February 2021, 3:58 pmவளர்ச்சி திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது :-விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்மூலம், 16.43 லட்சம் விவசாயிகள் வேளாண் கடன் தள்ளுபடியால் பயன்பெற்றனர். இதேபோல, ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.விவசாயிகள் மற்றும் மகளிரின் கோரிக்கை ஏற்று தற்போது, தங்க நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தான் சொல்லித்தான் முதலமைச்சர் பழனிசாமி செய்து வருகிறார் என பொய்யாகச் சொல்லி வருகிறார். அவர்கள் ஆட்சியில் இல்லை எதுவேண்டுமானாலும் சொல்லலாம். ஆட்சியில் இருக்கும் நாங்கள், ஆலோசனை நடத்தி, கணக்கெடுத்துதான் அனைத்தையும் செய்ய முடியும்.
எந்ததெந்த காலகட்டத்தில் மக்களுக்கு என்ன உதவிகள் தேவையோ, அதனை சரியாக செய்து வருகிறோம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதாலும், மக்களுடன் மக்களாக இருந்து வந்ததால், எந்த நேரத்தில் மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்பது தெரியும்.
இந்தியாவில் எந்த மாநிலமும் ரொக்கத்தை கையில் வைத்து எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது. செயல்படுத்தவும் முடியாது. கடன் வாங்காத மாநிலங்களே கிடையாது. கடன் வாங்கிதான் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் பயன்படுத்துகிறோம். மக்களுக்கு புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய கடன் வாங்க வேண்டியுள்ளது. வளர்ச்சி திட்டங்களை கடன் பெற்று செயல்படுத்துவதில் தவறு இல்லை. திமுக ஆட்சியிலும் கடன் பெற்றே திட்டங்களை நிறைவேற்றினர்.
மக்கள் பிரச்சனை குறித்து நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் திமுகவினர் குரல் கொடுத்திருக்கிறார்களா..? வேளாண் கடன் தள்ளுபடி என்பதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த திமுக முயற்சி செய்கிறது. வேளாண் கடன் தள்ளுபடிக்காக திமுக என்றாவது குரல் கொடுத்துள்ளதா..?
தமிழக அரசுப் பணிகள் இ-டெண்டர் முறையில்தான் டெண்டர்கள் ஒதுக்கப்படுகின்றன. இ-டெண்டர் முறையில் எப்படி முறைகேடு செய்ய முடியும்.
நான் முதலமைச்சரான போது சபாநாயகர் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரிய போது, திமுகவினர் சட்டப்பேரவையில் அராஜகம் செய்ததை முறியடித்துத்தான் ஆட்சி செய்து வருகிறோம். கட்சியை உடைக்கவும் அவர்கள் எத்தனை முயற்சிகள் மேற்கொண்டார்கள் என அனைவருக்கும் தெரியும். ஆட்சிப் பொறுப்பேற்கும் போது, வறட்சியால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, புயல் மற்றும் கொரோனாவால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால், சிறப்பான நடவடிக்கைகளினால் அனைத்தில் இருந்து மீண்டு வந்தோம்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காகவே தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தி வருகிறோம்.
ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் மீது விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகே புகார் உண்மையா..? இல்லையா..? என்பது குறித்து தெரிய வரும், எனக் கூறினார்.
0
0