நாடாளு., தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது..? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
25 January 2021, 7:59 pmகள்ளக்குறிச்சி : நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது..? என்று திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.
அப்போது, பொதுமக்களின் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று ஸ்டாலின் அறிவித்ததை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது :- அரசிடம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் மீது 3 மாதத்தில் தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படுகிறது. மனுக்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான விளக்ககமும் கொடுக்கப்பட்டு வருகிறது.
திமுகதான் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களிடம் பெற்ற மனுக்கள் என்ன ஆனது..? அதனை அரசிடம் திமுக கொடுத்திருந்தால் கூட, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக
வெற்றியை யாரும் தடுக்க முடியாது, எனக் கூறினார்.
0
0