தமிழக வீரர் பழனியின் இறப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது : முதலமைச்சர் இரங்கல்

16 June 2020, 4:13 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சென்னை : சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லை பிரச்சனை குறித்து இரு நாடுகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு, படைகளை வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று இரவு லடாக் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளின் போது, சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்தியப் படைகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரரும் மரணமடைந்துள்ளார். இவர் 22 வருடங்களாக ஹவில்தாரராக பணியாற்றி வந்தவராவர்.

இந்த நிலையில், சீனா ராணுவம் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- #LadakhBorder பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் – கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!, எனத் தெரிவித்துள்ளார்.