ஜெர்மனி கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி : முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

7 July 2021, 6:51 pm
stalin cm - updatenews360
Quick Share

சென்னை : ஜெர்மனியில் அமைந்துள்ள கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ் மொழியின் வளர்ச்சியில், ஜெர்மனியில் உள்ள கோலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்ப் பிரிவும் முக்கியப் பங்காற்றி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியில் ஆய்வு நிறுவனம் 1963ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு உருவான நிதிப்பற்றாக்குறையால், அங்கு பணிபுரிந்த தமிழ்ப் பேராசிரியர் திரு.உல்ரிக்க நிக்லாஸ் அவர்கள் செப்டம்பர் 2020இல் ஓய்வு பெற்றபின், தமிழ்ப் பிரிவை மூடுவதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. அந்த சமயத்தில், அமெரிக்கவாழ் இந்தியர்கள் தமிழ்த் துறை தொடர்ந்து இயங்குவதற்குத் தேவையான நிதியில் பாதியைத் திரட்டி கோலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால், தமிழ்ப் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது.

கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு தேவையான நிதியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாயை, 2019இல் முந்தைய ஆட்சியாளர்கள் தமிழக அரசின் சார்பில் அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அதனை உடனடியாக அளித்து அப்பல்கலைக்கழகத்திற்கு உதவ வேண்டுமென, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள். எனினும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட அத்தொகை விடுவிக்கப்படாததை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாயை உடனடியாக கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கு வழங்கிட இன்று (7.7.2021) உத்தரவிட்டுள்ளார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இவ்வரசு, இப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்து, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை இன்னும் இரண்டு ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் காணும் நல்வாய்ப்பிற்கு உதவிடும் என்பதோடு, தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உலகளவில் பரவிட என்றென்றும் துணை நிற்கும், என தெரிவித்துள்ளார்.

Views: - 102

0

0