ரவிசங்கர் பிரசாத்தா…? பிரகாஷ் ஜவடேகரா..? கடிதத்தை மாற்றி அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின் : சுட்டிக்காட்டி அறிவுரை கூறும் பாஜக…!!

7 July 2021, 1:48 pm
Quick Share

ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் அனுப்பாமல், வேறு துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழ் திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு’ துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதுவதற்கு பதிலாக, தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு கடிதம் எழுதினார்.

Stalin - Updatenews360

இந்த பிழையை தமிழக பாஜகவினர் சுட்டிக் காட்டினர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் அந்தப் பதிவை நீக்கிவிட்டு, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகிய இருவருக்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த செயலை பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அதாவது, தவறுதல் மனித இயல்பு. நேற்று காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவை திரும்ப பெற வேண்டும் என ‘தகவல் தொழில்நுட்ப’ துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு எழுதிய கடிதம் குறித்து பதிவிட்டிருந்தேன். இந்த கடிதமானது ‘தகவல் மற்றும் ஒளிபரப்பு’ துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டிய நிலையில், தவறுதலாக திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.

இந்த பிழையை எனது சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக அதே கடிதத்தில் சிறு திருத்தம் செய்து பதிவிட்டிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் அலுவலகத்தில் இது போன்ற கவனக்குறைவு நடந்திருப்பது வருந்தத்தக்கதே. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டு தவறை சரி செய்து விட்டோம் என்று பதிவிட்டிருந்தால், இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது அதிகாரிகள் கவனமாக இருப்பார்கள்.

என்னுடைய நோக்கம் முதல்வரை குறை சொல்வது அல்ல. கவனக்குறைவை சுட்டிக்காட்டுவது மட்டுமே. இதற்கு முதல்வர் மட்டுமே காரணமல்ல என்பதை நான் அறிவேன். பொறுப்பானவர்கள் பதட்டமில்லாமல் பொறுமையாக பணியாற்றுவது அவசியமாகிறது. தவறுதல் மனித இயல்பு தான், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 167

1

0