‘கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான்’ : சட்டசபையில் ஸ்டாலின் அதிரடி பேச்சு..!!
Author: Babu Lakshmanan14 August 2021, 1:11 pm
சென்னை : கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்முறையாக தாக்கல் செய்தது. நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை திமுக அரசு இன்று தாக்கல் செய்தது. வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்ட இந்த பட்ஜெட்டில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.573 கோடி ஒதுக்கீடு, கிருஷ்ணகிரி ஜுனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் தோட்டக்கலை கல்லூரி உருவாக்கப்படும், வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9,607 கோடி கடன் வழங்க திட்டம் உள்ளிட்டவை பட்ஜெட்டின் முக்கிய சாரம்சமாகும்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :- திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் கூட தற்போது தேர்தல் நடந்தால் வாக்களிக்க ஆர்வமுடன் உள்ளனர். வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என ஏமாற்ற தயாரில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், நிறைவேற்றுவோம்.
திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம் அதிகமாக இருந்தது. மருத்துவமனைகளில் படூக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை என அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தன. கொரோனாவை கட்டுப்படுத்த வார் ரூம் அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதுதான் ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.
திமுகவின் 100 நாள் ஆட்சியை பாராட்டிய அனைவருக்கும் நன்றி, பாராட்ட மனம் இல்லாதவர்களின் மனங்களை வெல்ல அடுத்த 100 நாட்களில் இரண்டு மடங்காக உழைப்போம். நிதி நிலைமை தான் சற்றே கவலை அளிக்கிறது. இந்த பெரும் பொறுப்பை என் தோளில் சுமக்க தயாராகி விட்டேன். இது எனது அரசு என்று சொல்வதை விட நமது அரசு. திமுக அரசு வரி இல்லாத பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது கலைஞர் இருந்து செய்ய வேண்டியதை அவர் மகன் நிச்சயம் செய்வான் என்பது உறுதியளிக்கிறேன், என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
0
0