கொப்பரை தேங்காய்க்கான ஆதார விலையை உயர்த்துக : மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை..!

19 August 2020, 5:52 pm
Cm edappadi - Updatenews360
Quick Share

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தேங்காய் உற்பத்தியில் முதன்மை மாநிலமாக திகழும் தமிழகத்தில், 4.40 லட்சம் ஹெக்டரில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேளாண் பொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவுகளை அடிப்படையாகக் கொண்டு, விலைகளுக்கான ஆணையம் செய்யும் பரிந்துரையின்படி, குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகிறது.

அதனடிப்படையில், இந்த ஆண்டுக்கு ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.99.60 என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த இரு வருடங்களில் கஜா புயல், ருகோஸ் வைட்ஃபிளை பூச்சி தாக்குதல் போன்ற இடர்பாடுகளை விவசாயிகள் சந்தித்து வருவதால் தமிழகத்தில் தென்னை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளின் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா ஊரடங்கு, போக்குவரத்து சிக்கல், வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களாலும் தென்னை விவசாயிகள் நெருக்கடியான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்றனர்.

தமிழகம் மற்றும அண்டை மாநிலங்களில் ஒரு கிலோ கொப்பரை தேங்காயின் சந்தை விலை ரூ.110 ஆக இருக்கும் நிலையில், கொப்பரை தேங்காய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆதார விலை ரூ.99.60 போதுமானதாக இருக்காது.

நெல், ராகி மற்றும் பருப்பு ஆகிய பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, சாகுபடி செலவில் 150 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிலையில், தென்னை விவசாயிகளுக்கும் உரிய ஆதார விலை கிடைக்க வேண்டும்.
எனவே, கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.99.60-லிருந்து ரூ.125 ஆக உயர்த்த வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.