கோவையில் அரசாங்கத்தின் ஆட்சியல்ல…? திமுக நிர்வாகிகளின் ஆட்சியா…? அதிமுக எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
2 September 2022, 1:57 pm
Quick Share

சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா? அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன் (வடக்கு) தாமோதரன் (கிணத்துக்கடவு), கந்தசாமி (வால்பாறை), கந்தசாமி (சூலுர்) ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியரிடம், கோவை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தங்களை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். அரசு நிகழ்ச்சிகளில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு நடத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் கூறிய அவர்கள், திமுகவினர் மாநகராட்சி நிர்வாகம் கூறியதை மீறியும், பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளதாகவும், அதனை அகற்றவில்லையெனில் நாங்களும் ஒட்டுவோம் என தெரிவித்தனர். மேலும், கோவையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறதா என சந்தேகம் எழுவதாகவும் கூறினர். எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன், அரசு திட்ட விழாகளில் தங்களை அழைப்பதில்லை எனவும், உதாரணத்திற்கு மருதமலை கோவிலில் மண்டபம் கட்டும் பணிக்கான பூஜை நடத்தும் போது சட்டமன்ற உறுப்பினரையும் அப்பகுதி வார்டு கவுன்சிலர் (அதிமுக) அழைக்காமல் திமுக பகுதி செயலாளரை வைத்து அந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக போட்டோ ஆதாரங்களுடன் தெரிவித்தார்.

அதேபோல, கிணத்துக்கடவு தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினரை சில பள்ளிகளில் மட்டும் அழைப்பதாகவும், சில பள்ளிகளில் அழைக்காமலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதாகவும், ஒன்றிய செயலாளரே அதனை வழங்கிவிட்டு நீங்கள் வர அவசியம் என தெரிவிப்பதாக கூறினார். இதுபோன்று சட்டமன்ற உறுப்பினர்களை அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், தங்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து மாபெரும் வெற்றி கிடைத்துள்ளதாகவும், எடப்பாடியாரிடம் இது குறித்து தெரிவித்து விட்டு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தார். தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என தெரிவித்தார். மேலும் அவிநாசி சாலை மேம்பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். தாங்கள் போஸ்டர்கள் ஒட்ட சென்றால் போலீசார் தங்களை தடுப்பதாகவும் கூறினார்.

மேலும் கோவையில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியா என தெரியவில்லை எனவும், இங்கு அரசாங்கம் நடப்பதில்லை எனவும் கட்சி ஆட்சிதான் நடப்பதாகவும் கூறினார். மேலும் இங்கு நடைபெறும் அரசு விழாக்களில் மாவட்ட நிர்வாக அழைப்பிதழ்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர் இருப்பதாகவும், ஆனால் தங்களை அழைப்பதில்லை என தெரிவித்தார். வெள்ளலூர் பேருந்து நிலைய கேள்விக்கு பதில் அளித்த அவர் எங்கள் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி செயல்படுவோம், என பதிலளித்தார்.

Views: - 462

0

0