கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்தது தமிழக அரசு..! ஆனால், எல்லாருக்கும் இது பொருந்தாது..!
26 August 2020, 2:24 pmசென்னை : தமிழகத்தில் கல்லூரி பருவத் தேர்வுகளை எழுதுவதில் மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் தவித்து வருகின்றன. இப்படியிருக்க, 10,11 பொதுத்தேர்வுகளை எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று விட்டதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை எழுதுவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களிடையே எழுந்து வந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் இறுதி பருவ தேர்வுகளைத் தவிர்த்து பிற தேர்வுகளை எழுதுவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கும் இறுதி பருவ தேர்வைத் தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.