காங். தோற்க வேலை பார்க்கும் எம்எல்ஏ?… திமுக கூட்டணியில் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 9:17 pm
Congress
Quick Share

நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளராக கடைசி நேரத்தில் ராபர்ட் புரூஸ் போட்டியிடுவார் என்று டெல்லி மேலிடம் அறிவித்தது முதலே அக்கட்சியில் ஏற்பட்ட குழப்பம் இதுவரை ஓய்ந்ததாக தெரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லையில் காங்கிரசை ஆதரித்து பேச வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் ராபர்ட் ப்ரூசை வேட்பாளராக அக்கட்சி மேலிடம் அறிவித்தது.

இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ராம சுப்பு, பால்ராஜ், காமராஜ், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் உள்ளிட்ட பலருடைய பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதற்கு ஏன் நெல்லையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட யாருமே கிடைக்கவில்லையா?… வேறு மாவட்டத்தில் இருந்துதான் வேட்பாளரை இறக்குமதி செய்ய வேண்டுமா?…என்ற கலகக் குரல்கள் நெல்லை மாவட்ட காங்கிரஸில் வெடித்தன.

இதற்கு பின்னணி காரணமும் உண்டு. குறிப்பாக ரூபி மனோகரன் நெல்லைத் தொகுதியை கேட்டு டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து வந்தார். பெரும் கோடீஸ்வரரான அவர், பணபலம் இருந்தால் மட்டுமே நெல்லையில் காங்கிரஸ் வெற்றி பெற முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து அத் தொகுதியை தனக்கு ஒதுக்கும்படியும் கேட்டார்.

ஆனால் ஏற்கனவே விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி பாஜகவில் இணைந்தவுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் ரூபி மனோகரனுக்கு எம் பி சீட் கொடுத்து அவர் ஜெயித்து விட்டால் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் நிலை உருவாகும். இது ஆளும் கட்சியான திமுகவுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் காங்கிரஸ் மேலிடம் அதை விரும்பவில்லை.

இந்த நிலையில்தான் நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு ஆதரவாக ரூபி மனோகரனும், அவருடைய ஆதரவாளர்களும் தேர்தல் களப்பணிகளில் ஈடுபாடு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும். அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி இரண்டாவது இடத்தைப் பிடித்து விடுவார். நாம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுவது உறுதி என்ற முணுமுணுப்பு குரல்களும் பலமாக ஒலிக்க தொடங்கியது.

திமுகவிடம் இந்த தொகுதியை போராடி கேட்டு வாங்கி இருக்கிறோம். காங்கிரஸ் பலமுறை வென்ற நெல்லை தொகுதியில் நாம் தோற்றால் அது கட்சிக்கு மிகுந்த அவமானமாகி விடும். அதனால் இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று கருதிய நெல்லை மாவட்ட மற்றும் நாங்குநேரி வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் டெல்லி மேலிடத் தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் காங். வேட்பாளருக்கு எதிராக செயல்படுவதாக புகார் கூறப்பட்டு இருக்கிறது.

“நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தோற்க ரூபி மனோகரன் வேலை பார்க்கிறார். எங்கள் தொகுதியில் நமது வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. நாங்குநேரியில் சுவர் விளம்பரம், பிட் நோட்டீஸ், அன்றாட தெரு பிரச்சாரம் என்று எதுவுமே கிடையாது. இங்கு காங்கிரஸ் சார்பில் போதுமான தேர்தல் பணிகள் நடைபெறவே இல்லை. தொகுதியில் வாக்கு சேகரிக்க தீவிரமான ஆதரவாளர்களும் இல்லை. இதற்கு முக்கிய காரணம் தொகுதியின் பொறுப்பாளராக உள்ள ரூபி மனோகரன் வெற்றிக்குத் தேவையான எந்த வழிவகைகளையும் உருவாக்கவில்லை. நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதுதான்.

உள்ளூர் நிர்வாகிகளான எங்களுக்கு எந்த மரியாதையும் கிடைப்பதில்லை பொது வெளியில் மக்கள் முன்னிலையிலேயே ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் சகித்துக் கொண்டும், பார்த்துக் கொண்டும் எங்களால் தேர்தல் பணிகளை ஆற்ற இயலாது. அதனால் தேர்தல் வேலைகளில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். நெல்லையில் ராபர்ட் புரூஸ் தோற்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ரூபி மனோகரனால் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது” என்று காங்கிரஸ் தலைமைக்கு எழுதிய அக்கடிதத்தில் நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மேலிடத்திற்கு எழுதிய இந்த கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

ஏற்கனவே நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலரும் மறைமுகமாக நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸுக்கு, ஆதரவாக தீவிரமாக தேர்தல் பணியாற்றி அவரை வெற்றி பெற வையுங்கள் என்று எச்சரித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் தரப்பிலேயே அதேபோன்ற குற்றசாட்டு எழுந்திருப்பதுதான் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

“இதே நிலை நீடித்தால் நயினார் நாகேந்திரன் எளிதில் வெற்றி பெற்று காங்கிரசை மூன்றாவது இடத்துக்கு தள்ளி விடுவார் என்பது நிச்சயம்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“அதேநேரம் ராபர்ட் புரூஸ் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தொடக்க முதலே நெல்லை தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளில் பலர் அவருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற விரும்பாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை. தவிர நெல்லை தொகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பே பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதனால் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை விட அவர் முன்னிலையில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிற விஷயம். திமுக கூட்டணியிலோ நெல்லை தொகுதி யாருக்கு என்பதே கடந்த மார்ச் 9ம் தேதிதான் உறுதியானது. அதுவரை திமுக மீண்டும் போட்டியிடுமா? அல்லது தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமா என்ற நிலைதான் இருந்தது. இந்த ஊசலாட்டமும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அட்வான்டேஜ் ஆக அமைந்து விட்டது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ரூபி மனோகரன் எம்எல்ஏ தனக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறிய புகார்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். “எனக்கு எதிரான கோஷ்டி திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகிறது. நெல்லையில் நான் ராபர்ட் புரூஸுக்கு அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கிறேன். நாங்குநேரியில் சுவர் விளம்பரம், பிட் நோட்டீஸ், தெரு பிரச்சாரம் என அனைத்தும் நடைபெறுகிறது” என்று
கூறியிருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் ரூபி மனோகரனின் ஆதரவு நெல்லை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை கொடுக்குமா? அல்லது காலை வாரி விடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 104

0

0