கடிவாளம் இல்லாத காங்கிரஸ் : காஷ்மீர் பிரச்சினையில் கிளப்பிய சூறாவளி!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2021, 5:01 pm
காங்கிரஸ் தலைவர்கள் அவ்வப்போது ஏதாவது ஏடாகூடமாக பேசி வம்பில் சிக்கிக்கொள்வது வழக்கம்.
அதுபோல ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து சோனியா, ராகுல் தலைமையிலான காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறார், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்வீந்தர் சிங் மாலி. அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் 4 அரசியல் ஆலோசகர்களில் இவரும் ஒருவர்.
மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்- சித்து இடையேயான 2 ஆண்டு கால மோதல் கடந்த மாத இறுதியில்தான் முடிவுக்கு வந்தது.
சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்கக்கூடாது என்று அமரீந்தர் சிங், கட்சி மேலிடத்திடம் எவ்வளவோ மல்லுக்கட்டி பார்த்தார். ஆனால் சோனியாவும், ராகுலும் அசைந்து கொடுக்கவில்லை.
ராகுல் போலவே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவின் தீவிர விசிறி. இதனால் அவர்கள் சித்துவுக்கு ஆதரவாக நின்றனர்.
இறுதியில் அவரே மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அமரீந்தர்சிங்-சித்து இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டாலும் அது இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், சித்துவின் ஆலோசகர், மல்வீந்தர் சிங் மாலி காஷ்மீர் பற்றி தெரிவித்த ஒரு கருத்து தேசிய அளவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “காஷ்மீர் ஒரு என்பது தனி நாடு. அதை இந்தியாவும் பாகிஸ்தானும், சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. காஷ்மீர் அங்கு வசிக்கும் மக்களுக்கே சொந்தமானது”என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை பாஜக, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.
முதலமைச்சர் அமரீந்தர் சிங், ஆதரவாளர்கள், இதுதான் அருமையான சந்தர்ப்பம் என்று இந்த விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சித்துவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
டெல்லி பாஜக தலைவர்கள் இதுபற்றி கூறும்போது, “சித்துவின் ஆலோசகர் மீது உடனடியாக காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலத்தின் காங்கிரஸ் தலைவரின் ஆலோசகராக உள்ள ஒருவரே இதுபோல கருத்து தெரிவிப்பது மிகவும் வேதனை தரக்கூடியது.
பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதத்திற்கு எதிராக நமது ராணுவத்தின் பல்வேறு பிரிவு படை பிரிவினைரும், போலீஸாரும் காஷ்மீரை பாதுகாக்க, தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தோரும் அடங்குவார்கள். இவர்களைப் போன்றவர்களின் உயரிய உயிர் தியாகத்தை மல்வீந்தர் சிங் மாலி மறைக்கப் பார்க்கிறார். அவருடைய தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஸ்திரத்தன்மையற்ற ஒரு தலைவர். அவருக்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்ததே பாஜகதான். மூன்று முறை அவர் பாஜக சார்பாகத்தான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சித்துவின் மனைவிக்கும் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியது. ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு சித்து காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.
அவருடைய அற்ப ஆசையால்தான், பஞ்சாப் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் முற்றியது. தற்போது தனது ஆலோசகரின் நடவடிக்கைகளை அங்கீரித்து இருப்பதன் மூலம் காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த பஞ்சாபியர்கள் அனைவரையும் அவமதித்து இருக்கிறார். இதற்காக நாட்டு மக்களிடம் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
சித்துவுக்கு எப்போதுமே பாகிஸ்தான் மீது, ஒரு மென்மையான போக்கு உண்டு.
3 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் சென்றபோது அந்நாட்டின் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவியவர். அந்த நினைவுகள் அவரிடம் இன்னும் அப்படியே உள்ளதுபோல் தெரிகிறது. சித்து இந்தியாவில் வசித்தாலும் கூடஅவருடைய எண்ணமெல்லாம் பாகிஸ்தானில்தான் உள்ளது”
என்று பாஜக கடுமையாக சாடி இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான, சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் பிக்ரம் சிங் மஜிதா, “சித்துவின் ஆலோசகர் கூறியிருக்கும் கருத்து காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த நமது படை வீரர்களை முற்றிலும் அவமதிப்பதாக உள்ளது. காஷ்மீர் என்பது காஷ்மீர்
மக்களுக்கே சொந்தமென்று மல்வீந்தர் சிங் மாலி கூறுகிறார். அப்படியென்றால் காஷ்மீர் என்பது தனிநாடு என்று அர்த்தமாகிறது.
மேலும் அந்த நாட்டை இந்தியாவும் பாகிஸ்தானும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார். ராகுல் காந்தி அவர்களே இது நாட்டின் ராணுவ வீரர்களை அவமதிப்பதுபோல் தெரியவில்லையா.? மாலி மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? அல்லது மாலியின் கருத்தை அவர் ஆதரிக்கிறாரா? அப்படியெனில் காங்கிரசின் முகத்திரை கிழிந்து விட்டது என்றுதான் அர்த்தம். மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், பஞ்சாப்பில் நிலவும் அமைதியை சீர்குலைக்க, குழப்பத்தை விளைவிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டி வருகிறார்.
இன்னொரு பக்கம், முன்பு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள சென்றபோது நவ்ஜோத் சிங் சித்து அந்நாட்டின் ராணுவ தளபதியை ஆரத்தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்” என்று கொந்தளித்தார்.
மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் ஆதரவாளர்களில் ஒருவரும் பஞ்சாப் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ராஜ்குமார் வெர்கா கூறும்போது, “சித்துவின் ஆலோசகர் கருத்து வெறுப்புணர்வை தூண்டுவதாக இருக்கிறது. காஷ்மீர் போன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளில் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளையும், அவருடைய செயல் பாதித்திருக்கிறது. சித்துவின் ஆலோசகர் எதற்காக அப்படி சொன்னார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் அவர் வரம்பு மீறி சென்று இருக்கிறார். சகோதரத்துவத்தை பற்றியும், நாட்டுப்பற்று குறித்தும் அவர் பேசி இருந்தால் நல்லது. ஆனால் அவருடைய கருத்து நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை அல்லவா
தூண்டி விடுவதாக அமைந்துள்ளது? இது மிகவும் கண்டிக்கத்தக்கது “என்று குறிப்பிட்டார்.
மல்வீந்தர் சிங் மாலி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது இது முதல்முறை அல்ல. அண்மையில் சித்துவின் ஆலோசகராக அவர் டெல்லி மேலிட ஒப்புதலுடன் நியமிக்கப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக, “பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவரும் பஞ்சாப் மாநிலத்தில் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்” என்று முகநூலில் அரசியல்
சரவெடியை கொளுத்திப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாலி அவ்வப்போது, இப்படி ஏதாவது ஒரு சர்ச்சை கருத்தை கூறுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ” சோனியாவும், ராகுலும் பஞ்சாப் காங்கிரஸ் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பிறகும் கூட அங்கு உட்கட்சி பூசல் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இருதரப்பினரும் சமூக ஊடகங்கள் வாயிலாக தினமும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதனால் 2022 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுமா? என்பது இப்போதே கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த மாதிரி சூழலில் சித்துவின் 4 ஆலோசகர்களில் ஒருவரான மல்வீந்தர் சிங் மாலி மட்டும் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் தேசத்திற்கு விரோதமான கருத்துகளை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறார். அவரை காங்கிரஸ் மேலிடம் அடக்கி வைக்கவில்லை என்றால்
அக்கட்சிக்கு தோல்வி 100% உறுதியாகிவிடும்.
ஏனென்றால் சிரோமணி அகாலிதளம், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் ஆட்சியைப் பிடிப்பதற்கான களத்தில் சம வாய்ப்புகளைப் பெற்று விடும். மேலும் ராகுலும், பிரியங்காவும் சித்து மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பதாகவும் அது அமைந்துவிடும். அவர்கள் இருவருக்கும் அவப்பெயரையும் ஏற்படுத்தும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பாதகமான முடிவுகளே கிடைக்க வழிகோலும்” என்று அவர்கள் எச்சரிக்கை மணி அடித்தனர்.
0
0