நோய் எதிர்ப்பு நடவடிக்கையை நொந்து கொள்ளும் சிலர் : வீட்டில் அடங்கமறுப்பது ஏன்…? இத்தாலியாகனுமா இந்தியா..?

27 March 2020, 10:58 am
POlice corona - updatenews360
Quick Share

வரக்கூடாதுதான்! ஆனால் வந்து விட்டதே! அதற்கு எதிர்வினை ஆற்றுவதுதானே அரசின் கடமை! எங்கோ சீனாவில் இருக்கிறது என்று நினைத்த கொரோனா, இப்படி எல்லா நாடுகளுக்கும் பரவும் என்று யார் கண்டார்கள்?

இத்தாலி அழிந்து கொண்டிருக்கிறது. ஈரான் இழுபறியில் இருக்கிறது. மொத்தம் 120 நாடுகளில் தன் கொடியைப் பறக்க விட்டிருக்கிறது கொரோனா. அதில் இந்தியாவும் ஒன்று. இந்த நெருப்பு நேரத்தில், நம் அரசின் கட்டளைகளுக்கு அடிபணிவதே ஆகச் சிறந்த முறை. ஏனென்றால், இந்தியா இத்தாலி ஆகிவிடக் கூடாதல்லவா!

தமிழக முதல்வர் மிக எளிமையாகச் சொன்னார். “விழிப்போடு இரு…விலகி இரு… வீட்டினுள் இரு…”  என்று.

ஆனால், இதன் சீரியஸ்னஸ்ஸைப் புரிந்து கொள்ளாத சிலரால்தான் எல்லாத் தொல்லைகளும் வருகின்றன.

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட பிறகு கூட வெளியே சுற்றிக் கொண்டிருப்போரை காவல்துறையினர் முதலில் அறிவுறுத்தி அனுப்பினார்கள்.அடங்க மறுத்து திரிந்து கொண்டிருப்போரை இப்போது அடித்துத் திருத்துகிறார்கள். சிலரைக் கைது செய்கிறார்கள்.

Cbe casevfiled -updatenews360

உடனே பொதுமக்களில் சிலர் பொங்கி எழுகிறார்கள். “காவல்துறை கட்டுமீறுகிறதாம்” சில கால்வேக்காடுகளின் கமெண்ட் இது.

அய்யா அறிவுக் களஞ்சியங்களே!

சும்மா தெருவில் இரண்டு பேர் கூடி நின்றாலே கொத்திக் கொண்டு போகும் கொரோனாவின் கோரப் பிடியில் நாம் இருக்கின்றோம்.
ஒரு தும்மல் போதும், ஒரு இருமல் போதும் அருகே இருப்பவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப!

கொள்ளை நோய் எவ்வளவு தமிழர் உயிர்களைக் கொள்ளை கொண்டது? காலரா எத்துணை பேரைக் காவு வாங்கியது?
சின்னம்மை எத்தனை பேரை சிதைக்கு அனுப்பியது? அவை எல்லாவற்றையும் விட அதி பயங்கரமானது கொரோனா.
மற்றவர்களிடம் இருந்து விலகி நிற்றலே நமக்கு முழுப் பாதுகாப்பு! தெருவிற்குப் போனால், நாலு பேரோடு பேசவோ, கைகுலுக்கவோ , நெருங்கவோ செய்தால் உங்களை அறியாமல் கொரோனா உங்களுள்ளே நுழையக் கூடும்.

EPS- updatenews360

அதைத்தான் தமிழக முதல்வர் அழகாகச் சொல்கிறார்.

விழிப்போடு இரு
விலகி இரு
வீட்டினுள் இரு

இதைவிடத் தெளிவாய் சொல்ல யாராலும் இயலாது. ஆங்கிலத்தில் இதை Social distancing என்று சொல்கிறார்கள். அதில் நமக்கு உடன்பாடில்லை. அந்த வார்த்தையே தவறு. இதைத் தமிழில் “சமூகத்திடமிருந்து தொலைவில் இருத்தல்” என்று அர்த்தப் படுத்தலாம்.

அப்படியானால் உண்மையில் என்ன பொருள்? மற்றவர்களை நீங்கள் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக்கூடாது. அதாவது நேரிலோ தொலைபேசி மூலமாகவோ, வாட்சப் மூலமாகவோ, SMS மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாகவோ கூடத் தொடர்பு கொள்ளக் கூடாது என்று பொருளாகிறது.

இல்லை, அது தவறு, ஃபேஸ்புக், ட்விட்டர், எஸ்எம்எஸ், தொலைபேசி, வாட்சப் என்று எதன் மூலமாகவேனும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். தவறே இல்லை. நேரில் பார்த்தால் கூடக் கூடிக் குழையாமல் ஒரு இரண்டு மீட்டர் தூரம் தொலைவில் இருந்து பழகினால் போதும். ஒன்றும் பிரச்சினை இல்லை.

அதனால், இதை social distancing என்று தவறாக அழைப்பதற்குப் பதிலாக Physical distancing என்று சரியாக அழைப்போம். அப்படி நாம் உடலளவில் விலகி இருக்கையில், கொரோனாவிற்கு அங்கே பரவும் சக்தி இல்லை.

Ariiyalur Ration Shop Corona-Updatenews360

மிகவும் முக்கியமான ஒன்று அடிக்கடி நம் கைகளை மிக நன்றாக சோப்பு போட்டு சுத்தப் டுத்துதல் அவசியம். ஏனெனில், கொரோனா பாதித்த ஒருவர் தொட்ட ஒன்றை நீங்களும் தொட நேரிடலாம் இல்லையா? அந்தக் காலத்தில் நம் வீடுகளின் வாசல்களில் ஒரு அண்டா நிறைய தண்ணீரும், ஒரு குவளையும் இருக்கும்.

வெளியே போனவர்கள் உள்ளே நுழையும் முன்பு கை கால்களை சுத்தப் படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு அது. நம் முன்னோர்கள் எதையும் காரணமில்லாமல் கற்பிக்கவில்லை.

தூய்மையாய் இருத்தல்…
தூரமாய் இருத்தல்…
தொடாமல் இருத்தல் ..
திரியாமல் இருத்தல்…

இந்த நான்கு வழக்கங்களையும் நான்கு வேதங்களாக நினைத்துப் பின்பற்றினால் கொரோனா வைரஸ் கொல்லப் பட்டுவிடும்.

இதற்காகத்தான் அரசாங்கம் அழுத்திச் சொல்கிறது. கேட்காதவர்களை போலீஸ் அடித்துச் சொல்கிறது.

கட்டுப்பாட்டோடு இருந்து காரிருள் விலக்குவோம்! “ஒழுக்கம்தான் இந்தியா” என்று உலகிற்கு விளக்குவோம்.

Leave a Reply