கம்யூ., கடும் அதிருப்தி.. ‘இலக்கு-200’ பலிக்குமா ? திமுகவின் திடீர் கலக்கம்

4 February 2021, 9:30 pm
Dmk - CPM - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்காக திமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதில் ஒரு டஜனுக்கும் மேலான கட்சிகள் இடம் பிடித்துள்ளன.
எப்படியும் இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே தீரவேண்டும் என்கிற முனைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின்
இந்த மெகா கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த கூட்டணிக்கு வலுவான அஸ்திவாரம் போடப்பட்டது. அதனால்தான் அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றியும் பெற்றது. அதேநேரம் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெறும் ஒரு சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி கண்டது.

அப்போது 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் துணிந்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி, 136 இடங்களில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிய சாதனையை படைத்தது. அது தமிழ்நாட்டில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி நிகழ்த்திய அரிய சாதனையாகவும் அமைந்தது. இந்தத் தேர்தலில் அதிமுக மட்டும் 227 தொகுதிகளில் போட்டியிட்டு சிறு சிறு கட்சிகளுக்கு 7 இடங்களை மட்டுமே ஒதுக்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இந்தத் துணிச்சலான தேர்தல் வியூகத்தைத்தான் தற்போது திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கையில் எடுத்து இருக்கிறார்.

prasanth kishor - stalin - updatenews360

அவர் ‘மிஷன்-200’ என்கிற திட்டத்தை வகுத்து செயல்படுத்துவதில் தீவிரம் காட்டியும் வருகிறார். அதாவது 200 இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதை இலக்காக பிரசாந்த் கிஷோர் வைத்து இருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

கூட்டணியின் வெற்றி இலக்கை 200 என்று வைத்திருப்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதைத்தான் கூட்டணியில் எந்த கட்சியாக இருந்தாலும் விரும்பும்.
ஆனால் பிரசாந்த் கிஷோர் இதில் திமுகவை மட்டுமே 200 இடங்களில் போட்டியிட வைக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இங்கேதான் திமுகவுக்கு இடியாப்ப சிக்கல் ஆரம்பிக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, SDPI ஆகிய ஆகியவை வலுவான கட்சிகளாக உள்ளன. இது தவிர இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரை டஜனுக்கும் மேலான சிறிய கட்சிகளும் இடம் பிடித்துள்ளன.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை. ஆனால் தொகுதிகள் கேட்பு பட்டியலை சுமார் ஒரு டஜன் கட்சிகள் திமுகவிடம் வைத்துள்ளன.

கடந்த தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கிய 41 சீட்டுகளை அப்படியே ஒதுக்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. மதிமுகவோ 18 தொகுதிகள் கேட்டு 12 ஆவது கொடுங்கள் என்று கெஞ்சுகிறது. திருமாவளவன் தலைமையிலான விசிககவும் 12 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளது. இதுபோலவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவையும்
தலா 12 தொகுதிகளை கேட்டுள்ளன.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே திமுக கூட்டணியில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி இம்முறை 15 தொகுதிகள் கொடுங்கள் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுத்து இருக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தன் பங்கிற்கு 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை சமர்ப்பித்து உள்ளது. இதுதவிர கூட்டணியில் இருக்கும் இதர சிறு சிறு கட்சிகளும் தங்களுடைய வலிமைக்கு ஏற்ப 4 முதல் 6 சீட்கள் வரை கேட்டுள்ளன.

இந்தக் கணக்குப்படி பார்த்தால் ஏறக்குறைய 160 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக விட்டுக்கொடுக்க வேண்டி வரும். இந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுக்குமா? அல்லது பிரசாந்த் கிஷோர்தான் கொடுக்க விடுவாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவரும் அறிந்த விஷயமே. ஏனென்றால் இந்த கட்சிகள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கி விட்டால் திமுகவால் வெறும் 74 இடங்களில் மட்டுமே போட்டியிட முடியும். இத்தகைய தாராள தியாக மனப்பான்மை கூட்டணிக்கு தலைமை தாங்கும் எந்தக் கட்சிக்கும் இருக்காது.

தனக்கு மிஞ்சித்தான் தானமும், தர்மமும் என்பதுபோல முதலில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொண்ட பின்பே, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முன்வருவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பகிர்ந்து தருவதில் திமுக காட்டி வரும் கடுமை, அந்த மெகா கூட்டணியை தவிடுபொடி ஆக்கி விடும்போல் தெரிகிறது.

dinesh gundu rao - congress - updatenews360

காங்கிரசுக்கு15 தொகுதிகள், இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 3, மதிமுக, விசிக இரண்டுக்கும் தலா 2, இஸ்லாமியர்கள் கட்சிக்கு தலா 3, சிறு சிறு கட்சிகளுக்கு 3 தொகுதிகள் என மொத்தம் 34 இடங்களை மட்டுமே திமுக தலைமை ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை மையப்புள்ளியாக வைத்தே திமுக காய்களை நகர்த்தியும் வருகிறது.

எந்தக் கட்சியாவது, இதைவிடக் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட விரும்பினால் திமுகவின் சின்னத்தில் நில்லுங்கள், தனிச் சின்னத்தில் எல்லாம் நீங்கள் அதிக சீட்டுகளில் போட்டியிட முடியாது என்று திமுக கண்டிப்புடன் திமுக கூறி வருகிறதாம். குறிப்பாக மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு இந்த அழுத்தம் மிக கனமாகத் தரப்படுகிறது.

இதை கூட்டணி கட்சிகள் ஏற்குமா என்பது சந்தேகம்தான். திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்காத நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

cpm - updatenews360

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் நேற்று திமுக தலைவர்களுடன் ரகசிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது, திமுக தரப்பில் இருந்து 3 தொகுதிகள் நிச்சயம் ஒதுக்குவதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ந்து போன அந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையே பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பி விட்டனர் என்று கூறப்படுகிறது.

முறைப்படியான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்காத நிலையில், திமுக காட்டும் இந்த அதிரடி நிபந்தனைகளை கூட்டணியில் உள்ள எந்த பெரிய கட்சியும் இதுவரை ஏற்கவில்லை. அதனால்தான் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நிலையிலேயே உள்ளதாக கருதப்படுகிறது.

சரி, இதுகுறித்து திமுக என்ன நினைக்கிறது? திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் சொன்னதுதான் என்ன?
அதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் மனம் திறந்து பேசியபோது, “காங்கிரஸ் செல்வாக்கு இழந்த கட்சி என்று பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். அதனால் 15 இடங்கள் கொடுப்பதே அதிகம் என்றும் அவர் ஸ்டாலினிடம் சொல்லியிருக்கிறார். மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை அதை அவர் பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்தக் கட்சிகளில் வைகோ, திருமாவளவன் தவிர சொல்லிக் கொள்ளும்படி உள்ளூரில் பிரபல தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் இவர்களுக்கு இரண்டு, மூன்று தொகுதிகள் ஒதுக்கினாலேபோதும் என்று நினைக்கிறார். ஆனாலும் கூட்டணி கட்சிகளிடம் திமுக இவ்வளவு மோசமாக நடந்து கொள்ள வேண்டியதில்லை. எந்தக் கட்சியும் கூட்டணியை விட்டு வெளியே போய் விடாது என்கிற அசட்டு தைரியத்தில் இப்படி திமுக தலைமை நடந்து கொள்கிறது.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோல 200 இடங்களிலும் ஜெயிக்கவேண்டும், கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளும் ஒதுக்க கூடாது என்று திமுக நினைக்கிறது.

இது சாத்தியமில்லாத ஒன்று. ஒன்று மட்டும் உறுதி. கலைஞரிடம் இருந்த அணுகுமுறை ஸ்டாலினிடம் அறவே இல்லை. அதை பிரசாந்த் கிஷோரிடம் அடகு வைத்து விட்டார் என்றே தோன்றுகிறது. கூட்டணிக் கட்சிகளை திமுக மதித்து நடப்பதை பொறுத்தே இந்த மெகா கூட்டணி நீடிக்குமா? சிதறுமா? என்பதை சொல்ல முடியும்” என்று கூட்டணி உடையும் அபாயம் குறித்து அந்த நிர்வாகி எச்சரிக்கை மணி அடித்தார்.

இப்படி கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மனக் குமுறலும் அண்ணா அறிவாலயத்தையும் எட்டியுள்ளது. இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்!

Views: - 0

0

0