“என் வழி… தனி வழி…” அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கொளுத்தி போட்ட சரவெடி.. உச்சகட்ட டென்ஷனில் CM ஸ்டாலின்…?

Author: Babu Lakshmanan
14 October 2022, 3:33 pm
Quick Share

கோஷ்டி மோதல்

திமுகவில் கோஷ்டிகள் இல்லாத மாவட்டங்களே கிடையாது என்று சொல்வார்கள். மதுரை, திருச்சி, சேலம் நெல்லை, திருப்பத்தூர், திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் இது மிக மிக அதிகம் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஒரு கோஷ்டியும், அந்த மாவட்டத்தின் அமைச்சர் தலைமையில் இன்னொரு கோஷ்டியும் ஒருவரை ஒருவர் முறுக்கிக்கொண்டு செயல்படுவதை பார்க்க முடியும்.

anna arivalayam- updatenews360

இதுபோன்ற கோஷ்டிகள் எல்லாக் கட்சிகளிலுமே உண்டு என்பதையும் மறுக்க முடியாது. அவர்கள் சில நேரங்களில் தங்களது ஆதரவாளர்கள் மூலம் மறைமுகமாக மோதியும் கொள்வார்கள். அதேநேரம் கட்சியின் தலைவர் முன்பாக, இவர்கள் அனைவருமே பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் விடுவதும் வழக்கம்.

வேதனை

எனினும் தற்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவில் கோஷ்டி மோதல் நிறையவே காணப்படுகிறது.

CM Stalin - Updatenews360

இந்த நிலையில்தான் கடந்த 9-ம் தேதி சென்னையில் நடந்த திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின்
தனது அமைச்சரவை சகாக்கள், கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில் வேதனையோடு, பேசும்போது, “ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு 2 பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன்” என்று மனம் வெதும்பி கூறி இருந்தார்.

அது திமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த மூன்றே நாட்களில் மதுரை திமுகவில் பலத்த கோஷ்டி பூசல் இருப்பது அம்பலமாகியுள்ளது.

புது தலைவலி

இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்னொரு தலைவலியாகவும் உருவெடுத்து
இருக்கிறது.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தனது மாவட்ட திமுக நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து முதல் முறையாக மனம் நொந்து பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதுவும் திமுக தலைவராக மீண்டும் ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் அவருடைய ஆதரவாளர்கள் மதுரையில் நடத்திய பிரியாணி விருந்து நிகழ்ச்சியில் இதை போட்டு உடைத்து இருக்கிறார்.

இந்த நிகழ்வில் அண்மையில் மதுரை மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கோ.தளபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ளவில்லை.
அதேநேரம் பிடிஆர் தியாகராஜனின் ஆதரவாளர்களான மதுரை மேயர் இந்திராணி, மிசா பாண்டியன், மாநில மாணவர் அணி துணை செயலாளர்
அதலை செந்தில்குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இதில் பிடிஆர் தியாகராஜன் பேசும்போது,”கடந்த சில நாட்களாக மதுரை திமுகவில் வெளியாகும் தகவல்கள் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது.

நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை. ஒரு தகவலை முதலமைச்சரிடம் கூறினால் இதயத்திலிருந்து கூறுவேன். எனக்கு என்று கொள்கையும் தத்துவமும் உண்டு. எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ அதனை நான் பின் பற்றுவன். தந்தை பெரியாரின் கருத்தை நான் பின்பற்றுகிறேன். யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. நான் தனி வழியில் சென்று கொண்டிருக்கிறேன்.

5 முறை அரசியல் அழைப்பு வந்தபோது தவிர்த்தேன். 6வது முறையாக வந்த அழைப்பை ஏற்றேன். தலைவர் எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளார். அதிலிருந்து கீழே இறங்கவில்லை. பெரிய மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். உங்களிடமும் பெரிய மனிதனாக இருங்கள் என்றுதான் கூறுகிறேன்.

எனக்காக ஜால்ரா தட்டு என்று சொல்லமாட்டேன். பெரிய மனிதனாக இருக்க முடியவில்லையென்றாலும் சின்ன மனிதர்களாக இருக்காதீர்கள்.

ஐடி விங் பொறுப்பை என் தலைவர் எனக்கு வழங்கினார். அப்போது ஐடி விங் பேப்பரில் கூட இல்லை. அதை பெரிதாக்கி, 4 வருடங்களில் ஒரு நாள் கூட விடாமல் உழைத்தேன். அந்த நாட்களில் கூட எனக்கு போஸ்டர் ஒட்டு. ஏர்போர்ட்டில் வந்து எனக்காக கோஷம் எழுப்பு என்று கேட்டது இல்லை. யாரிடமும் அவரை போய் பார்க்காதே, போஸ்டரில் பெயரைப் போடாதே எனச் சொன்னதில்லை. எனக்காக போஸ்டர் அடி, வேலை செய் என்றும் கூற மாட்டேன், ஏனென்றால் நான் பெரிய மனிதன். இயற்கையில் என்ன நடக்குமோ அது நடக்கும். தகுதியுள்ள, பெருந்தன்மை உள்ள ஆட்களை வீழ்த்த முடியாது” என்று ஆவேசப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் இப்படி பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூர்த்தி vs PTR

நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் இது போல் பேசியதற்கு பல காரணங்கள் உண்டு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் தெரிவிக்கும் தகவல்கள், இவை: “கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது முதலே அமைச்சர்களான தியாகராஜனுக்கும், மூர்த்திக்கும் இடையே மறைமுக போட்டி நிலவி வருகிறது. வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர் வாசுகி சசிகுமார் மேயர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பி.டி.ஆரின் நெருங்கிய ஆதரவாளர் பொன்.வசந்தின் மனைவி இந்திராணி மேயர் பதவியை தட்டி பறித்தார்.

தன்னை மேயர் பதவிக்கு கொண்டு வந்தது அமைச்சர் பிடிஆர் தியாகராஜன்தான் என்பதால், அமைச்சர் மூர்த்தியை மேயர் இந்திராணி கண்டு கொள்வதே இல்லை என்கிறார்கள்.

அதேநேரம் அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர் தேர்தலில் பிடிஆர் தியாகராஜன் சிபாரிசு செய்த அதலை செந்தில்குமார் ஓரங்கட்டப்பட்டு பெரும்பாலான மதுரை மாநகர நிர்வாகிகளின் ஆதரவோடு கோ.தளபதி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் வெளிப்பாடுதான் பிடிஆர் தியாகராஜனின் இந்த ஆவேச பேச்சு என்று கூறுகிறார்கள்.

இந்த தேர்தல் அமைச்சர்கள் மூர்த்திக்கும், பிடிஆர்  தியாகராஜனுக்கும் 
இடையேயான பனிப்போர் ஆகவும் இருந்தது. ஆனால் சில அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து கோ.தளபதியை வெற்றி பெற வைத்து விட்டதால் அமைச்சர் மூர்த்தியின் கை மதுரையில் தானகவே ஓங்கி விட்டது.

இதனால்தான் அவருடனும் மற்றும் மதுரை மாவட்ட திமுக செயலாளர்களுடனும் அமைச்சர் தியாகராஜனுக்கு ஒத்துப்போகாத நிலை உருவானது.

மேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கு பிறகு அவர்களது நட்பில் விரிசல் அதிகரித்து விட்டதையே அமைச்சர் தியாகராஜனின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. சமீபத்திய மதுரை நிகழ்வுகளில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கும் எந்தவொரு பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கலந்து கொள்வதில்லை. இதேபோல் தியாகராஜன் கலந்து கொண்டால் மூர்த்தி பங்கேற்பது கிடையாது.

3 தலைமுறை

இன்னொரு தகவலும் திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை தொகுதியில் பிடிஆர் தியாகராஜனை போட்டியிட வைத்து டெல்லிக்கு அனுப்பிவிட வேண்டும். அப்போதுதான் அவரால் நமக்கு இடையூறு இருக்காது என்று கருதும் பிடி ஆர் தியாகராஜனின் எதிர்ப்பாளர்கள் கட்சித் தலைமைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக பேச்சு அடிபடுகிறது. அதை விரும்பாததால்தான் பிடிஆர் தியாகராஜன் இப்படி அதிரடி காட்டி இருக்கிறார்
என்றும் கூறுகிறார்கள்.

திமுகவில் பல கோஷ்டிகள் இருப்பதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களில் பலர் இப்போதும் அமைச்சர்களாக உள்ளனர். மாவட்டத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை அவர்கள் இழக்க ஒருபோதும் விரும்புவதில்லை. அப்படி நடந்துகொண்டால், கட்சியில் ஒருவர் கூட தங்களை மதிக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதற்கடுத்து தற்போது திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்களும்
மாவட்ட நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தவே விரும்புவார்கள். அதை தடுப்பதும் கடினம். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு திமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராக கருதப்படும் உதயநிதிக்கும் ஆதரவாளர்கள் பெருகி விட்டனர். இவர்களில் குறிப்பாக அன்பில் மகேஷ் கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இப்படி மூன்று தலைமுறை தலைவர்களின் ஆதரவாளர்களும் ஒரே நேரத்தில் கட்சியில் உயர் பதவிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவதோடு மட்டுமின்றி அதற்காக போட்டிக் களத்திலும் குதிக்கிறார்கள்.

Stalin - Updatenews360

இது தவிர தற்போது திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழிக்கும் ஆதரவான நிர்வாகிகளும் திமுகவில் கணிசமான அளவில் உள்ளனர். இதனால் இயல்பாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டுக்கும் மேற்பட்ட கோஷ்டிகள் திமுகவில் இருக்கின்றன. சில மாவட்டங்களில் 4 கோஷ்டிகளையும் கூட பார்க்க முடிகிறது.

மேலும் கடந்த மாதம் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணத்தில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், “கீர்த்தி பெரிதா, மூர்த்தி பெரியதா? என்று என்னைக் கேட்டால் மூர்த்திதான் பெரியது” என பாராட்டி பேசினார். இதுபோல ஒரு கட்சியின் தலைவரே பேசுவது, இயல்பாகவே ஒரு மாவட்டத்தில் பல கோஷ்டிகள் ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்” என்றும் அந்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Views: - 537

0

0