‘எமர்ஜென்சி’ ஞாபகம் : காங்கிரசுக்கு கல்தா திமுக அதிரடி முடிவு

2 February 2021, 8:30 pm
DMK - cong - updatenews360
Quick Share

தேர்தல் வந்துவிட்டால் அரசியல்வாதிகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கலக்கமும், நடுக்கமும் வந்துவிடும். அதுவும் பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த உதறல் தானாக எடுக்கும். எனினும் இதையெல்லாம் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர்கள் மேடைகளில் பேசிக் கொண்டே இருப்பார்கள்.

இதுபோன்றதொரு மனக்கலக்கம் அண்மைக்காலமாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஏற்பட்டிருப்பதை அவருடைய தேர்தல் பிரச்சார பேச்சுகள் மூலம் உணர முடிகிறது.

குறிப்பாக, பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தி பேசுகிறோம் என்கிற பெயரில் அவரையும் அறியாமலேயே பல உண்மைகளை வெளிக்கொட்டி விடுகிறார். ஒருவேளை, இதை அவர் தெரிந்தே பேசுகிறாரா? அல்லது தெரியாமல் பேசி விடுகிறாரா? என்பதுதான் சற்று பிடிபடாத விஷயமாக உள்ளது.

Stalin- Updatenews360

ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என்பதற்காக அவர் இப்படிப் பேசுகிறார் என்பது புரிகிறது. மறைந்த முதல்வர் எம்ஜிஆரை எனது பெரியப்பா போன்றவர் என்று நேற்று முன்தினம் கூறி தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அது,’பூமராங்’ போல அவரையே திரும்பி வந்து தாக்கி விட்டது. எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்கிய பிறகு கருணாநிதி எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பதை
‘அக்குவேர் ஆணிவேராக’ அவருடைய சம காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் புட்டுப் புட்டு வைத்தனர்.
ஸ்டாலினின் பெரியப்பா பேச்சைக் கேட்டு சிரிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

இப்படி இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்னொரு பெரிய அரசியல் நிகழ்வை அவர் நினைவு கூர்ந்தார். அவருடைய அந்த வார்த்தைகளில் மனக் குமுறல், ஆற்றாமை நிறையவே காணப்படுகிறது.

ஸ்டாலின் பேசும்போது, “இந்திரா காந்தி 1976ல் நாட்டில் பிரகடனப் படுத்திய அவசர நிலை சட்டத்தால் ஓராண்டு சிறையில் பல கொடுமைகளை நான் அனுபவித்தேன்” என்று உருகினார்.

1976-77 மிசா கால சிறைவாச அனுபவத்தை அவர் மேலும் விவரித்தபோது, “நாங்கள் சிறைக்கு சென்ற நாளில் இருந்தே பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டோம். அங்கு இருக்கும் திமுகவினரை கண்மூடித்தனமாக போலீசார் தாக்கினர். அப்போது எனக்கு விழ வேண்டிய அடிகளை அண்ணன் சிட்டிபாபு வாங்கினார். பலத்த காயம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் இறந்துவிட்டார். இன்றைக்கும் பல போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்பட்டு அடையாளம் காட்டச் சொல்லும் போது, மிசா தழும்பு என்று கூறி எனது கையில் இருக்கும் தழும்பை காட்டுவேன்” என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

Stalin Minister-Updatenews360

அவருடைய முதல் நாள் பேச்சில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்றாலும் கூட, அவர் திரும்பத் திரும்ப தனது கடந்த காலத்தை கூறி இன்றைய இளைய தலைமுறையினரிடம் தன்னைப் பற்றிய நல்லெண்ணத்தை ஆழமாக பதிய வைக்க முயற்சிக்கிறார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

தற்போது அவருடைய கிருஷ்ணகிரி பேச்சும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் எமர்ஜென்சியை கொண்டுவந்தது யார் என்பதை அவர் நேரடியாகவே சொல்லி காங்கிரசாருக்கு கடும் அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

ஏற்கனவே, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை தங்களது கூட்டணியில் வைத்திருக்கலாமா..? இல்லை கழற்றி விடலாமா..? என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் திமுக, தற்போது தனது நிலைப்பாட்டை பகிரங்கமாகவே அறிவித்து விட்டதாக தோன்றுகிறது. இது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஸ்டாலின் திடீரென்று இப்படி பேசவேண்டிய அவசியம் என்ன என்பது புரியாமல், காங்கிரஸ் தலைவர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

இது பற்றி தமிழக காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் மனம்விட்டுப் பேசிய போது, “ஸ்டாலின் கடந்த இரண்டு தினங்களாக டைம் மெஷினுக்குள் நுழைந்ததுபோல், 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளார். எம்ஜிஆர் எனது பெரியப்பா என்கிறார். ஆனால் அதிலும் கூட முழுமையாக எந்த விஷயத்தையும் குறிப்பிடவில்லை. அவர் சொன்னதில் 10 சதவீதம் உண்மை மட்டுமே உள்ளது.
எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றிய பின்பு கருணாநிதி அவரை எப்படியெல்லாம் படாதபாடு படுத்தினார் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.

அடுத்து எமர்ஜென்சி பற்றி அவர் பேசியிருக்கிறார். சிறைக்குள் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அதனால் அவர் கூறுவது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட, நெருக்கடி நிலையை எதிர்த்த அதே திமுகதான் 1980 நாடாளுமன்ற தேர்தலின்போது, எம்ஜிஆர் ஆட்சியை கவிழ்ப்பதற்காக காங்கிரசுடன் கூட்டு வைத்துக் கொண்டது. அப்போது நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று எங்கள் அன்னை இந்திராவுக்கு கருணாநிதி வாழ்த்துப் பாவும் பாடினார்.

Sonia_Rahul_Manmohan_UpdateNews360

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் அடுத்து அடுத்த சில மாதங்களில் நடத்தப்பட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார் என்பதை ஸ்டாலின் சொல்ல மறந்து விட்டார்.

அதாவது இதிலுள்ள மிகப் பெரிய உண்மை என்னவென்றால் 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது திமுகவால் 1977-ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் 1980-ல் அதை ஸ்டாலினின் பெரியப்பாவான எம்ஜிஆர் செய்து காட்டி சாதனை படைத்தார். அதுதான் எம்ஜிஆர் மகிமை என்பதையும் ஸ்டாலின் கூறவில்லை. இதையும் அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதன் பின்பு கூட பலமுறை காங்கிரஸ் – திமுக கூட்டணி அமைந்தபோதுகூட, நெருக்கடி நிலையை திமுக
தேர்தல் பிரச்சார ஆயுதமாக கையாளவே இல்லை.
கூட்டணி தோல்வி கண்டால் கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். கூட்டு சேர்வதற்கு முன்பு மறப்போம், மன்னிப்போம் என்று சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். திமுக வெற்றி பெற்றால் கூட்டணி பலத்தால் ஜெயித்தோம் என்று சுருக்கமாக முடித்துக் கொள்வார்கள்.

இதைத்தான் திமுகவின் ராஜதந்திரம் கலைஞரின் சாணக்கியம் என்று பெருமையுடனும் கூறிக்கொள்வார்கள்.

stalin upset - updatenews360

இன்று இப்படி பேசும் ஸ்டாலின், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா வெளியேறி ஏன் திமுகவை தொடங்கினார் என்பதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். அவர் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடக்கூடாது. அவர்தான் அண்ணாவுக்கு பக்கோடா வாங்கி கொடுத்தவர் ஆயிற்றே!

தமிழக காங்கிரஸ் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கும் என்பதற்காக அளிக்கும் நெருக்கடியாகவே இதை நாங்கள் பார்க்கிறோம். எங்களை கழற்றி விட்டுவிட்டு பாமகவை கொண்டு வருவதற்கான முயற்சியிலும் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, என்பதையும் அறிவோம். ஒருவேளை எங்களை வெளியேற்ற முடியாமல் போனால் 15 தொகுதிகள் கொடுத்து சமாளித்துவிடலாம் என்று ஸ்டாலின் கருதுகிறார். அதனால்தான் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை குறித்து அவர் இப்போது பேசி நெருக்கடி தருகிறார்” என்று அந்த நிர்வாகிகள் வருத்தத்துடன் கூறினார்.

எதையோ பிடிக்கப்போய், எதிலோ முடிந்த கதையாக ஸ்டாலினின்
அந்த நாள் ஞாபகம் இருப்பதாகவே தோன்றுகிறது.

இன்றைய தலைமுறையினர் பழைய விஷயங்களை தேடிப் பிடித்து அதை அலசி ஆராய்வதில் கெட்டிக்காரர்கள்.
அவர்களிடம், ‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ என்பது போன்ற மலரும் நினைவுகள் பேச்சு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பே அதிகம் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Views: - 0

0

0