இன்பநிதி எங்கு படிக்கிறார் என்பதை முதலில் சொல்லுங்க..? தி.மு.க.விற்கு எச்.ராஜா கேள்வி..!

9 September 2020, 12:22 pm
hraja-mkstalin1-updatenews360
Quick Share

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும், மும்மொழிக் கொள்கை முடிவை வாபஸ் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

தமிழகம் போன்றே பிற மாநிலங்களும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இதனை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இருப்பினும், தமிழகத்தில் இந்தி திணிப்பு என்னும் போராட்டத்தை சமூகவலைதளங்கள் வாயிலாக தி.மு.க. முன்னெடுத்து வருகிறது. இதற்கு பா.ஜ.க. மற்றும் இதன் ஆதரவு கட்சி தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர்.

இதனிடையே, ஏ.டி.எம். மற்றும் வங்கிகளில் பிராந்திய மொழிகளை மத்திய அரசு நீக்கம் செய்ய முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர், இது குறித்து பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதனிடையே, கடந்த 7ம் தேதி வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பிராந்திய மொழிகளை நீக்கும் முடிவுக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பதாகவும், மீண்டும் பழைய முறையை உடனடியாக கொண்டு வரவேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

H raja 1 - updatenews360

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தி.மு.க.,விற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட் செய்துள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது :- மரியாதைக்குரிய நிதியமைச்சர் உங்களின் குற்றச்சாட்டுக்கு கண்டிப்பான மறுப்பு தெரிவித்துள்ளார். நீங்கள் 1967ம் ஆண்டு நிகழ்ந்ததை கொண்டு வர முயற்சிக்காதீர்கள். இது 2020ம் ஆண்டு. எதையோ இழந்ததை போன்ற மாயையை உருவாக்கி, தமிழர்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதே தி.மு.க.வின் பொழப்பாகி விட்டது. முதலில் இன்பநிதி எங்கு படிக்கிறார் என்பதை சொல்லுங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியை எதிர்த்து வரும் தி.மு.க.வின் புள்ளிகளில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். அதில், இந்தி உள்ளிட்ட பாடங்களை கற்பிக்க கட்டணமும் வசூலித்து வருகின்றனர். தற்போது தனியார் பள்ளியில் பயின்று வரும் திமுக தலைவர் ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, இந்தி பயிலாமாவா இருக்கிறார் என்ற கேள்வியே தற்போது பொதுவான விவாதமாக எழுந்து வருகிறது.

Views: - 0

0

0