திமுகவை மிரட்டுகிறாரா திருமாவளவன்…? எல்லை தாண்டி கிளைகள் விரிப்பு… அனல் பறக்கும் அரசியல் களம்!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 3:37 pm
Quick Share

புது ரூட்

கடந்த சில மாதங்களாகவே விசிக தலைவர் திருமாவளவனின் அரசியல் பார்வை கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களை நோக்கி திரும்பியிருக்கிறது.

அதேபோல டெல்லியில் இருக்கும்போது பல்வேறு மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசுவதையும் திருமாவளவன் தீவிரப்படுத்தி வருகிறார்.

தனது கட்சியை தேசிய அளவில் பிரபலம் அடையச் செய்யவேண்டும், நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வைக்கவேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக அவர் தென் மாநிலங்களில் அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும், இந்த மாநிலங்களில் உள்ள விசிக நிர்வாகிகளிடம் கலந்துரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தேசிய அரசியல்

டெல்லி ஆம் ஆத்மி அரசில் இருந்து திடீரென பதவி விலகி பரபரப்பை ஏற்படுத்திய அந்த மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் தலைமையில் பட்டியலின தலைவர்கள் இரு தினங்களுக்கு முன்பு நடத்திய தீண்டாமைக்கு எதிரான பேரணியில் தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மட்டுமே கலந்து கொண்டார்.

அது மட்டுமின்றி டெல்லியில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சங்கர் சிங் வகேலாவை நேற்று காலை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். முன்பு காங்கிரசில் இருந்த வகேலா தற்போது குஜராத்தில் பிரஜா சக்தி ஜனநாயகக்கட்சி என்னும் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சங்கர்சிங் வகேலாவை திருமாவளவன் சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாநிலத்திலும், தனது கட்சியின் கிளையை தொடங்கும் நோக்கத்துடன் அவருடன் பேச்சு நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆந்திராவில் போட்டி

இந்த நிலையில் நேற்று மாலை ஆந்திர விசிக மாநில செயற்குழு கூட்டத்தையும் அவர் சென்னையில் நடத்தினார். அப்போது ஆந்திராவில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமின்றி 2024 தேர்தலில் ஆந்திராவில் விசிக பங்கேற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இதற்காக டிசம்பர் 20-ம் தேதி அரசியல் எழுச்சி மாநாடு மதனப்பள்ளியில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவலை திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டும் இருக்கிறார்.

திமுகவுக்கு எச்சரிக்கை

கடந்த 6-ம் தேதி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கிய பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சென்னை திரும்பிய பிறகு திருமாவளவனின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

அந்த விழாவில் தன்னை, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுக்காக தீவிரமாக போராடும் ஒரு தலைவர் திருமாவளவன். அதனால்தான் அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறேன் என்று சந்திரசேகர ராவ் கௌரவப்படுத்தி பேசியதை அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழக மேடைகளில் திருமாவளவன் வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

அதாவது அவருடைய பேச்சு, தமிழகத்தில் தனது கட்சியின் கூட்டணி இல்லாமல் இனி யாராலும் வெற்றி பெற முடியாது என்பதை ஆணித்தரமாக சொல்வது போல இருந்தது.
இது திமுகவுக்கும் சேர்த்தே சொல்லப்பட்ட தகவல் மாதிரி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பும் ஏற்பட்டது.

இதற்கு கடந்த 9-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் அமைச்சர் ஐ பெரியசாமி பூடகமாக பதிலடி கொடுத்தார்.

அவர் பேசும்போது “வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி சேர்ந்து விட்டால் அவ்வளவுதான் என்கிறார்கள். இந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான், அந்த கட்சி சேர்ந்தால் அவ்வளவுதான் என்றும் சொல்கிறார்கள். வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும், திமுக தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை நான் ஏதோ மேடை பேச்சுக்காக சொல்லவில்லை. உறுதியாகவே சொல்கிறேன்” என்று சவால் விடுவது போல குறிப்பிட்டார்.

மனித சங்கிலி

அமைச்சர் ஐ பெரியசாமி இப்படி பேசியது பற்றி யாரிடம் கருத்து கேட்கப்பட்டதோ இல்லையோ, முதலில் திருமாவளவனிடம்தான் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்”திமுக வலுவாக இருப்பதை வைத்தும், மக்கள் செல்வாக்கு பெற்று திமுக இருப்பதையும் வைத்து அவ்வாறு பேசியிருக்கலாம்”என்று ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.

மறுநாளே திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை திருமாவளவன்
அவசர அவசரமாக சந்தித்து, இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். தவிர “தமிழக எல்லையைக் கடந்து தங்களின் பங்களிப்பு இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது; தங்களோடு இக்களத்தில் சிறுத்தைகள் உற்றத் துணையிருக்கும்” என்று உறுதியும் அளித்தார். எனினும் தனது கட்சியின் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பதை காண முடிகிறது.

சென்னையில் கடந்த 11-ம் தேதி நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி அணிவகுப்பு திருமாவளவன் தலைமையில்தான் முன்னெடுக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட 17 சிறு சிறு கட்சிகள் பங்கேற்றன. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆச்சரியப்படும் விதமாக இந்த அணியிலேயே இல்லாத சீமானின் நாம் தமிழர் கட்சியும் இந்த மனித சங்கிலிக்கு தனது ஆதரவை அளித்தது.

rth

சவால்

“இப்படி பெரும்பாலான கட்சிகளை ஒன்று திரட்டியதன் மூலம் திமுகவுக்கு மறைமுகமாக திருமாவளவன் ஒரு செக் வைத்திருக்கிறார்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து 37 தொகுதிகளில் அதிமுக ஜெயித்ததைப்போல, வெற்றி பெறலாம் என திமுக நினைக்கிறது. ஆனால், அப்போது இருந்த அரசியல் சூழலே வேறு. அந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தனித்தனியாகப் பிரிந்து போட்டியிட்டன. ஜெயலலிதா மிகப்பெரிய செல்வாக்கோடு இருந்தகாலம் அது. அதனால், தற்போதைய நிலையை இதனுடன் ஒப்பிட முடியாது. மேலும் வலுவான கூட்டணி அமைத்ததால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைத்தது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.

அதேபோல எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 32 தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புவதாக கூறப்படுவதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு சரிபாதியாக குறைய வாய்ப்பும் உள்ளது.

stalin - thirumavalavan - updatenews360

ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தற்போது காங்கிரசை விட அதிக செல்வாக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருப்பதாக திருமாவளவன் உறுதியாக நம்புகிறார். இதனால் அவர் 2024 தேர்தலில், குறைந்தபட்சம் 5 தொகுதிகளாவது திமுக ஒதுக்கவேண்டும், அவற்றில் தங்களது கட்சி சின்னத்திலேயே வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தவும் வாய்ப்பு உள்ளது.

எனவேதான் அவருடைய சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் திமுகவுக்கு விடுக்கும் மறைமுக மிரட்டலாக கருதத் தோன்றுகிறது. தனது கட்சிக்கு ஒதுக்கும் தொகுதிகளை திமுக ஒரு போதும் குறைத்து விடக்கூடாது, கட்சியின் செல்வாக்கிற்கு ஏற்ப அதிக தொகுதிகளை அதிகரித்து தரவேண்டும்
என்பதும் அவருடைய கோரிக்கையாக அமையலாம்.

அதேநேரம் தனது கட்சி தேசிய அளவில் பட்டியல் இன மக்களுக்கான பிரதான கட்சியாக இருக்கவேண்டும் என்றும் அவர் நினைக்கிறார். அதனால்தான் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் திருமாவளவன் அதிக கவனம் செலுத்துகிறார். சந்திரசேகர ராவ் தலைமையிலான கூட்டணியில் விசிக இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உள்ளது. அது உண்மையாகவும் இருக்கலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் சொல்கின்றனர்.

ஆந்திர மாநில விசிக நிர்வாகிகளுடன் திருமாவளவன் கலந்துரையாடியது குறித்து சில நெட்டிசன்கள் அவருடைய டுவிட்டர் பக்கத்திலேயே “2024-ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கூட வருது அண்ணே, அதுலயும் விசிக பங்கேற்க வேண்டும்!

உலகமெங்கும் கிளைகள் கொண்ட கட்சி தலைவரே!…

இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் இளைஞர்களின், இளம் பெண்களின் அவர்களது குடும்பங்களில் விளக்கேற்றியது போதாது, இப்போ ஆந்திரா வா?…”
என்றும் கிண்டலடித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 351

0

0