இளைஞரணிக்கு 60 சீட்- உதயநிதி : நெருக்கடியில் மூத்த தலைவர்கள்!!

4 March 2021, 7:16 pm
Udhayanidhi stalin - updatenews360
Quick Share

2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் சுற்றுப்பயணம் செய்து திமுகவின் கூட்டணியின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார், உதயநிதி. அந்தத் தேர்தலில் திமுக, தான் போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 18 இடங்கள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கவேண்டும் என்று திமுகவில் கோரிக்கை எழுந்தது.
அந்தப் பதவியில், ஏற்கனவே வெள்ளக்கோவில் சாமிநாதன் இருந்து வந்ததால், உடனடியாக அப்பதவியை உதயநிதிக்கு கொடுப்பதில் சிக்கல் எழுந்தது.

ஆனாலும் ‘அரண்மனைக்கு நேர்மனை இல்லை’ என்பதற்கு ஏற்ப உதயநிதி இளைஞரணி செயலாளராக நியமிக்கப் படுவதற்கு வசதியாக வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பதவி திமுகவில் வழங்கப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது.

udhayanidhi - updatenews360

இதையடுத்து அவர் இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உதயநிதிக்கு அந்த வாய்ப்பு எளிதாக வந்து சேர்ந்தது. திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதால் அவருக்கு கட்சியில் அமோக வரவேற்பும் கிடைத்தது.

அதைக் கடந்த 2 ஆண்டுகளில் உதயநிதியும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். மாவட்டம் தோறும் தீவிர சுற்றுப்பயணம் செய்து திமுக இளைஞர் அணி தொண்டர்களிடையே எழுச்சியையும் ஏற்படுத்தினார் என்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது, இளைஞரணி செயலாளராக பதவி வகித்த ஸ்டாலினுக்கு கூட இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே.

கட்சியில் தனது கை ஓங்கியதும் உதயநிதி, மெல்ல மெல்ல தனது ஆதரவாளர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சீனியர் தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இது வெளிப்படையாகவே கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதுவும் அன்பில் மகேஷ், டி.ஆர்.பி. ராஜா போன்ற உதயநிதியின் தீவிர ஆதரவாளர்கள் அவர்களது மாவட்ட எல்லைகளை கடந்து பிற மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

இதை மூத்த தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. உதயநிதியின் ஆதரவு இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தகவல் போனாலும், அவர் அதை அதிகமாக கண்டுகொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.

udhayanidhi stalin - updatenews360

இந்த நிலையில் சமீபகாலமாக, உதயநிதி ஊடகங்களில் அவ்வளவாக தென்படுவதில்லை. அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேலி பேசப்போய், சசிகலாவையும் சேர்த்து நாகரீகமாகமற்ற முறையில் விமர்சித்த விவகாரம் தமிழக பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் எரிச்சலடைந்த திமுகவின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், உதயநிதியை கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்கள், இல்லையென்றால் கட்சியின் இமேஜ் கெட்டு விடும் என்று கட்சித் தலைமை எச்சரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் அவருக்கு தற்போது ஊடக வெளிச்சம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதாம்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்காக, முன்கூட்டியே பிரச்சாரத்துக்கு ஆயத்தமானவர்களில் மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு இணையாக 44 வயது உதயநிதியையும் சொல்லலாம். கடந்த இரண்டு மாதங்களாக உதயநிதி தமிழகத்தில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு 175க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்து இருப்பதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் உள்ள சீனியர் தலைவர்களின் கைகளைக் கட்டிப் போட்டது, தேர்தல் பிரச்சாரத்தில் வேகம் காட்டியது போன்றவை வருகிற தேர்தலில் அவர் இளைஞர் அணிக்கு தொகுதிகளை கட்சி மேலிடத்திடம் பேரம்பேசி வாங்கும் அளவிற்கு உயர்த்தி இருக்கிறது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது போக திமுக மட்டும் 180 தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சரிபாதி இடங்களாவது இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் வற்புறுத்தி வருகிறார். இந்த பாயிண்ட்டை கையில் எடுத்துக்கொண்ட உதயநிதி, தொடர்ந்து 5 முறைக்கு மேல் திமுக சார்பில் போட்டியிட்டவர்களுக்கு இம்முறை வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக திமுக இளைஞரணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

KN Nehru, Ponmudi- Updatenews360

மாறாக மூத்த தலைவர்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் இளைஞரணியின் முக்கிய நிர்வாகிகளுக்கு குறைந்த பட்சம் 60 சீட்களாவது ஒதுக்கி தரவேண்டும் என்று திமுகவின் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி எம்பி, ஆகியோரிடமே உதயநிதி வெளிப்படையாக கூறியிருக்கிறார், என்கின்றனர்.

ஆனால் இவர்களில் யாருக்குமே உதயநிதியிடம் நீங்கள் கேட்பது ரொம்பவே அதிகம். உங்கள் தந்தை இளைஞரணி செயலாளராக இருந்தபோது கூட, இத்தனை தொகுதிகள் கேட்டதில்லை என்று நேரடியாக சொல்ல தைரியம் இல்லாததால், அதை ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு போனதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து மகனை அழைத்துப் பேசிய ஸ்டாலின் இளைஞர் அணிக்கு நிச்சயம் 20 சீட்டு கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Udhayanidhi vel - updatenews360

அப்போது உதயநிதி, கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக இளைஞரணியை மிகவும் வலிமைப்படுத்தி இருக்கிறேன்.
29 லட்சம் பேரை கஷ்டப்பட்டு உறுப்பினர்களாகவும் சேர்த்து இருக்கிறேன். அதனால் 50 தொகுதிகளாவது கிடைத்தால்தான் இளைஞர் அணியினர் உற்சாகத்துடன் தேர்தல் வேலை பார்ப்பார்கள் என்று தந்தையிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஸ்டாலின், 25 தொகுதிகள் வரை ஒதுக்க முடியுமா? என்று பார்க்கச் சொல்கிறேன் என மகனை சமாதானப்படுத்தி இருக்கிறார்.

அப்போதும் உதயநிதி விடவில்லையாம். 50 பேருக்காவது டிக்கெட் வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார். தனது தந்தை என்பதால் உரிமையோடு உதயநிதி வேண்டுகோள் வைத்தாரா? அல்லது இளைஞரணி செயலாளர் என்கிற முறையில் கண்டிப்புடன் கேட்டாரா? என்பது தெரியவில்லை.

உதயநிதி இப்படி தனது தந்தையிடம் இளைஞரணிக்கு தொகுதிகள் கேட்ட வாக்குவாத விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Views: - 1

0

0