செந்தில் பாலாஜி கைதுக்கு மறுநாள்… தீயிட்டு கொளுத்தப்பட்டதா ஆவணங்கள்..? வைரலாகும் வீடியோ ; சிக்கலில் கோவை மேயர்..?

Author: Babu Lakshmanan
14 September 2023, 2:31 pm
Quick Share

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு மறுநாளில் பல ஆவணங்களை கொட்டி தீ வைத்ததாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ஜூன் 14ம் தேதி கைது செய்தது. அதனைத் தொடர்ந்து, அவருடைய குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை பல கட்டங்களாக சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றியது.

Senthil Balaji - Updatenews360

இந்த வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிக்கை ஆகஸ்ட் 12ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிறகும், சென்னை, கோவை, கரூர், நாமக்கல் ஆகிய ஊர்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுபடியும் அதிரடி சோதனைகளை நடத்தினர். மீண்டும் செந்தில் பாலாஜி தொடர்பான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதன்மூலம், செந்தில் பாலாஜிக்கு எதிராக இன்னும் பல ஆதாரங்களை தேடுவது உறுதியாகியது.

செந்தில் பாலாஜி மற்றும் அவரின் குடும்பத்தினர் செய்த பணப்பரிவர்த்தனைகள், சொத்து ஆவணங்களை அமலாக்கத் துறை தேடுகின்றதா என்ற விவாதமும் எழுந்தது. ஆவணங்கள் அழிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் வந்துள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட மறுநாளில் கோவை மேயர் கல்பனா வசிக்கும் மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் சில காகித ஆவணங்களை, அங்குள்ள மைதானத்தில் கொட்டி மேயரின் சகோதரர் குமார் தீ வைத்து எரித்ததாக தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் எரிக்கப்படாத சில காகிதங்களில் பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான வார்த்தைகளும் உள்ளன.

அதில் “66 லட்சத்து 50 ஆயிரம் மட்டும்” என்று குறிப்பிட்டு, அந்த தொகைக்கு காசோலை கொடுக்கப்பட்ட விபரமும் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் கைதான அடுத்த நாட்களில் இந்த காகித எரிப்பு சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து கோவை மேயர் கல்பனாவின் தம்பி குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்கையில்,
“அது தவறான தகவல், குப்பையை மட்டுமே எரித்தேன். தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன, இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

ஏற்கனவே, பக்கத்து வீட்டுக்காரரின் குடும்பத்திற்கு கோவை மேயர் கல்பனாவின் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்து வருவதாக பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது இந்த சம்பவம் கோவை மேயருக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Views: - 428

0

0