வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி, ஒட்டுமொத்த சமுதாயத்தையே உயர்த்துபவர்தான் ஆசிரியர் : ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..!

5 September 2020, 11:01 am
Sarvepalli_Radhakrishnan 1- updatenews360
Quick Share

அன்னை, தந்தையின் வரிசையிலே அறிவூட்டும் குருநாதரும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறார். நம் இந்தியப் பண்பாட்டில் குருவின் பங்களிப்பு மிகவும் ஏற்றம் மிகுந்தது. இறைவனுக்கு ஒப்பாக குருவை வணங்கிப் போற்றும் நாடு நம் நாடு. வாரநாட்களில் ஒன்றான வியாழக்கிழமையை “குரு வாரம்” என்று கொண்டாடும் நாம், வருடத்திற்கு ஒரு நாளை அவர்கள் பெயர் சொல்லி அழைக்க மாட்டோமா என்ன?

இப்படி ஆசிரியர்களுக்காக ஒரு தினம் உருவாகக் காரணம், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும், இரண்டாம் குடியரசுத் தலைவராகவும் பணியாற்றிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள்தான்.

இராதாகிருஷ்ணன் அவர்கள் திருத்தணியில் ஓர் எளிய குடும்பத்தில் 1888 செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி அவதரித்தார். நன்கு படித்துப் பட்டதாரியான அவர், தனது பணியை சென்னை பிரசிடென்சி கல்லூரி ஆசிரியர் ஆகத்தான் தொடங்கினார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை வாய்ந்த அவர், மிக அற்புதமான தத்துவப் பேராசிரியாக உருவெடுத்தார். உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை ஆகிய நூல்களுக்கான உரைகளையும், புத்த, ஜைன தத்துவங்களையும் ஆங்கிலத்தில் எழுதி புத்தகங்களாக வெளியிட்டு நமது பாரத ஆன்மீகத்தை உலகறியச் செய்தவர்தான் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

ஒருமுறை பகவத் கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதி மகாத்மா காந்தியின் கைகளில் கொடுத்து, “பாபுஜி, இதைப் படித்துப் பார்த்து விட்டு இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று இராதாகிருஷ்ணன் கூறியபோது, காந்தி அவர்கள் “நீங்கள் ஆசிரியர் நான் மாணவன்! உங்கள் எழுத்தில் குறையே இருக்காது” என்று சொல்லி நூலைக் கண்களில் ஒற்றிக் கொண்டாராம். அப்பேர்ப்பட்ட அறிவுலக ஆசான் நம் இராதாகிருஷ்ணன்.

அகில இந்திய ஆசிரியர் சம்மேளனம் ஆசிரியர்களுக்கென்று ஒரு தினத்தை அறிவித்து, கல்விச் சேவையை கௌரவப் படுத்த வேண்டுமென்றும் , அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றி இருப்பதால், அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியையே ஆசிரியர் தினமாக அறிவிக்க வேண்டுமென்றும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த நேரு அவர்களின் சீரிய முயற்சியால் செப்டம்பர் ஐந்தாம் தேதியை ஆசிரியர் தினமாக அறிவிக்கப் பட்டது. 1962ம் வருடம் செப்டம்பர் ஐந்தாம் தேதியிலிருந்து இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவைப் பின்பற்றி பல உலக நாடுகள் ஆசிரியர் தினத்தை வெவ்வேறு தேதிகளில் அறிவித்தன என்பதே நம் ஆசிரியர் தினத்தின் வெற்றியாகும். நம் தமிழகத்தில் பிறந்த ஒரு மாமேதை உலகிற்கே எடுத்துக் காட்டாக விளங்குவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் நம் தமிழ் மொழிதான் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று அழுத்தமாக குருநாதர்களைக் கும்பிட்டு மகிழ்கிறது.

அந்த தினத்தில் நன்கு பணியாற்றிய ஆசிரியர்களை கௌரவிப்பது பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்குவது போன்றவை நடைபெறும். இருண்ட சமுதாயத்திற்கு அறிவு வெளிச்சம் பாய்ச்சுபவரே ஆசிரியர்!

ஞானப் பசி கொண்ட மாணவர்களுக்கு அறிவுப் பாலமுது தந்து அவனது பசியைப் போக்கி சிறக்க வைப்பவர்தான் ஆசிரியர்! மக்களுக்குக் கல்வி வழங்கிட தனது வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி, ஒட்டுமொத்த சமுதாயத்தையே உயர்த்துபவர்தான் ஆசிரியர்!

“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடினார் பாரதியார்.

அந்தக் கோயிலின் தெய்வமாக விளங்கும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி மகிழ்வோம்.

Views: - 0

0

0