2021 சட்டசபை தேர்தலுக்கு தயாரானது அ.தி.மு.க. : வியூகங்களுடன் களமிறங்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்..!

21 September 2020, 4:21 pm
eps ops - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உட்பூசல் வெடித்தது. அதனை கட்சிகளின் தலைவர்கள், தங்களின் திறமைக்கேற்றவாறு கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க.வைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தாலும், அவரை வெற்றி பெறச் செய்யும் முக்கிய தலைவர்களில் முட்டல், மோதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அதேவேளையில், அ.தி.மு.க.வில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த பேச்சு அண்மையில் வெடித்தது. எதிர்கட்சியினரும் இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வே சரிந்து விடும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில், அ.தி.மு.க.வின் மேல்மட்டத் தலைவர்களின் ஆலோசனை நடைபெற்றது. அதில், ஆட்சியும், கட்சியும் ஒவ்வொருவர் எடுத்த நடத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த 28ம் தேதி செயற்குழுவை அக்கட்சியினர் கூட்டுவதாக அறிவித்தனர். இருப்பினும், இரு ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பினர் சந்தித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதன்படி, ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமே கொடுத்து விட்டு, கட்சி நிர்வாகத்தை மட்டும் எடுத்துக் கொள்ள ஓ.பி.எஸ். ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை அவைத் தலைவராக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளையில், சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்க்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே, ஓ.பி.எஸ்.சிற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்க இருப்பதாகவும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கூறுவதாகக் கூறப்படுகிறது. அதோடு, சசிகலா விசுவாசிகளை ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அ.தி.மு.க. நம்பிக்கை தலைவர்கள் கூறியுள்ளனர்.

Views: - 4

0

0