பாஜக களமிறங்கினால் வாபஸ் வாங்கிடுவோம்… அது இல்லைனாலும் போட்டி போட்டிதான்.. : ஓபிஎஸ்-ஸின் வித்தியாசமான அறிவிப்பு

Author: Babu Lakshmanan
1 February 2023, 6:18 pm
Quick Share

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலை வேட்பாளரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அறிவித்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த 4ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது.

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளார். அதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவரும், டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்திருக்கிறார். அதிமுகவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் வேட்பாளரை அறிவித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியின் தொண்டர் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்த அவர், செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார். அதேசமயம் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் தனது வேட்பாளரை திரும்ப பெறுவதாகவும் கூறியிருக்கிறார். அதிமுகவின் சின்னம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்றும், சின்னம் முடங்கினால் தனி சின்னத்தில் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் என்றும் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பெரிய கட்சியாக சொல்லிக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், பாஜக வேட்பாளர் அறிவித்தால், தங்களின் வேட்பாளரை வாபஸ் சொல்வேன் எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தட்டுதடுமாறி பதிலளித்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகியது.

Views: - 390

0

0