‘மணி 9.30 ஆகியும் மருத்துவர் வரல’… விபத்தில் சிக்கியவருக்கு உடனே சிகிச்சை கொடுத்த முன்னாள் அமைச்சர் : வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
14 November 2023, 2:36 pm
Quick Share

புதுக்கோட்டையில் மருத்துவர் இல்லாத நிலையில், விபத்தில் சிக்கியவருக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை அளித்து உதவிய வீடியோ வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, மருத்துவர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை அளிக்க கால தாமதமானது. அந்த சமயம் அப்பகுதியில் சைக்கிள் பயணம் செய்து கொண்டிருந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது, மருத்துவர்கள் இல்லாததால், விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்தார். பின்னர், கூடவே இருந்து நோயாளியை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தரமான சிகிச்சை வழங்க பரிந்துரை செய்வதாகவும் உறுதியளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த வீடியோவை தனது X தளப்பக்கத்தில் பகிர்ந்த விஜயபாஸ்கர், தீபாவளி திருநாளின் மறுநாள் காலை வழக்கம்போல் மிதிவண்டி பயணம் தொடர்ந்தது. அப்போது, நம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாலை விபத்துக்குள்ளான நபர் மிகுந்த வலியுடன் மருத்துவருக்காக காத்திருக்கும் செய்தியறிந்து, மருத்துவமனைக்கு விரைந்தேன்.

5 மருத்துவர்களுக்கான பணியிடம்; ஆனால், காலை 9.30 வரை மருத்துவர்கள் வருகை தரவில்லை. இடது கையில் எலும்பு முறிவுடன் அவதிப்பட்ட அந்நோயாளிக்கு மருத்துவர் என்ற முறையில் முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்.

மக்களின் வலி நிவாரணியாக இரு‌க்க வேண்டிய அரசு மருத்துவமனை நோயாளிகளின் உயிர் காக்கும் உயரிய நேரத்தை தவற விடுவது வருத்தத்துக்குரியது. தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். நோயாளிக்கு இடது கை முறிவால் வலி; எனக்கும், மக்களுக்கும் மருத்துவர்கள் இல்லாத மன வலி. “தமிழக சுகாதாரத்துறைக்கு வாழ்த்துகள்.”, என தெரிவித்துள்ளார்.

Views: - 324

0

0