ஓபிஎஸ் மகன் கட்சியில் மீண்டும் இணைப்பா…? அதிமுக பொதுக்குழு குறித்து விரைவில் அறிவிப்பு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!

Author: Babu Lakshmanan
24 February 2023, 3:52 pm

திமுகவின் பி டீம் ஆக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் மீண்டும் எப்படி சேர்க்க முடியும்..? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது. அதில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக முழுமையாக வந்துவிட்டது. இதனை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேவேளையில், நீதிமன்றத்தில் இந்த உத்தரவால், ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லத்தக்கதாகி விட்டது.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:- அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கறிஞர் குழுவினருடன் தேர்தல் ஆணையத்திடம் இன்று வழங்க உள்ளனர். இதன் மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பது தேர்தல் ஆணையத்தில் உறுதியாகும். அதிமுக பொதுக்குழு மீண்டும் எப்போது கூடும் என்பது உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

அதிமுகவினரால் நிராகரிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், திமுக.வின் ‘பி’ டீம் ஆக செயல்படும் அவரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? அவர் மட்டுமல்ல அவரது மகன் ரவீந்திரநாத் எம்பியும், அதிமுகவில் இல்லை. இந்த தகவல் நாடாளுமன்றத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவிற்கு சரியான பதிலடி அதிமுக கூட்டணி வழங்கும். கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு அதிமுக வேட்பாளர் தென்னரசு நிச்சயம் வெற்றி பெறுவார். உச்ச நீதிமன்றம் பலவீனப்படுத்தும் என டிடிவி தினகரன் சொல்லியுள்ள கருத்துக்கு அவர் என்ன சட்ட வல்லுனரா..?, என கேள்வி எழுப்பினார்.

  • Amaran movie 100 days celebration பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!