அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம்..! நீட் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்..!

16 October 2020, 11:37 pm
neet today - updatenews360
Quick Share

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், இந்திய அளவில் அரசுப் பள்ளிகளில் தமிழக அரசுப் பள்ளி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 13’ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவுகள் இன்று மத்திய கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில், ஒடிசாவைச் சேர்ந்த ஷோயிப் 720’க்கு 720 எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். தமிழக அளவில் நாமக்கல் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720’க்கு 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 8’வது இடம் பிடித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை சண்டிகரில் மிக அதிகபட்சமாக தேர்வெழுதியவர்களில் 75.64% மாணவர்களும், டெல்லியில் 75.49% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 8.87% உயர்ந்து 57.44% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.21 இலட்சம் மாணவர்களில் 99,610 மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் ஸ்ரீஜன் முதலிடத்தைப் பிடித்த நிலையில் மாணவி மோகன பிரபா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த சாதனைகள் ஒரு பக்கம் இருக்க, தமிழக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் ஜீவித் குமார், இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில், 664 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், பெரியகுளம் பகுதியில் உள்ள சில்வார்ப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நீட் நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வாவதில்லை எனும் கருத்து பரவலாக தமிழகம் முழுவதும் உள்ள நிலைநில் , இது சரித்திர சாதனையாக பார்க்கப்படுவதோடு மட்டுமல்லமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மற்ற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜேஇஇ மெயின் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது நீட் தேர்விலும் தமிழக அரசுப் பள்ளி மாணவர் சாதித்துள்ளதற்கு காரணம், அகில இந்திய தரத்திற்கு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டம் தான் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 19

0

0