‘போராட்டம் எல்லாம் நாடகம்… இது ரொம்ப பெரிய தப்பு’… அண்ணாமலையை மீண்டும் மீண்டும் சீண்டும் காயத்ரி ரகுராம்..!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 12:58 pm
Quick Share

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்துக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்த சகோதரர்கள் பிரபாகரன் (31) – பிரபு (28). இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58). இவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30). இதில் குருசூர்யமூர்த்தி, சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி பொதுகுடிநீர் தொட்டியில் துணி துவைத்த விவகாரத்தில் பிரபாகரன் குடும்பத்தினருக்கும், திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டைக்கட்டை, இரும்புக்கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், ராணுவ வீரர் பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அதேவேளையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் தலைமறைவாகினர். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் போராட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்த நிலையில், போராட்டத்தை அறிவித்த அண்ணாமலையை பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழக பாஜக தலைவரின் தவறான செயல்களை மறைக்க இந்த பிரச்சினையை போராட்டத்திற்கு பயன்படுத்துவது தவறானது. ராணுவ வீரர் திரு பிரபுவை கொன்ற கும்பல் மீது உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக போலீசாருக்கு நன்றி. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்போ அதை அரசியலாக்குவது தவறு.

குடும்பத்திற்கு அரசு வேலையும், அவரது மனைவி பிரியா மற்றும் குழந்தைக்கு 1 கோடி இழப்பீடும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். ஆனால் ஒட்டுமொத்த குண்டர்களும் சுதந்திரமாக இயங்குகிறார்கள், தமிழகத்திற்கு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு கடுமையா இருக்க வேண்டும். தேசிய செய்தி சேனல்களில் அண்ணாமலை பேச வேண்டும், தனது கெட்டப் பெயரைத் மறைக்கவே, இந்த சம்பவத்தை எடுத்து 5 நாட்களுக்குப் பிறகு தேசிய சேனல்களில் கொண்டு வந்துள்ளார்.. தவறு.. போலீஸ் தேவையானதைச் செய்கிறது. காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீது எல்லாம் பழி சுமத்துவது தவறு, எனக் கூறியுள்ளார்.

Views: - 375

0

0