திசை மாறும் அரசு ஊழியர்கள் ஓட்டு?… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின்

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 9:17 pm
DMK
Quick Share

திசை மாறும் அரசு ஊழியர்கள் ஓட்டு?… திண்டாட்டத்தில் CM ஸ்டாலின்

திமுகவுக்கு எப்போதுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பது உண்டு. கருணாநிதி காலம் தொட்டே மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்காக இவர்கள் தங்களது வாக்குகளை மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஓட்டுகளையும் அக்கட்சிக்கு சாதகமாக பதிவு செய்ய வைத்தும் விடுவார்கள்.

ஆனால் தமிழகத்தில் வருகிற 19 ம் தேதி 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு
நடக்கவிருக்கும் நிலையில், இந்த முறை அவர்கள் அனைவருமே திமுக அரசுக்கு எதிராக திரும்பி இருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாநிலம் முழுக்க நடத்தியும்விட்டனர். அப்போதும் கூட திமுக அரசு அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

ஆனால் இப்போது தேர்தல் வந்து விட்டதால் இந்த வாக்குறுதியால் வெற்றி வாய்ப்பில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதை ஸ்டாலின் உணர்ந்து விட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதனால்தான் சில தினங்களுக்கு முன்பு மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும், மாநில அரசின் நிதி நிலை சீரடைந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இதை அரசு ஊழியர்கள் நம்புவார்களா? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் 85 வயதுக்கும் மேற்பட்டோர், மற்றும் மாற்றுத் திறனாளிகள் தங்களது வீடுகளில் இருந்தே தபால் வாக்குகளை கடந்த 5 தினங்களாக பதிவு செய்து வருகின்றனர். இவர்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் உண்டு.

இப்படி தபால் ஓட்டுகளை அரசு ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று நேரடியாக பதிவு செய்யும்போது அங்கு உள்ளூர் திமுக நிர்வாகிகள் சிலரும் அவர்களுடன் இருப்பது வழக்கமான ஒன்று என்கிறார்கள். ஆனால் தற்போதைய தபால் வாக்குப்பதிவின்போது
திமுக நிர்வாகிகள் யாரையும் அரசு ஊழியர்கள் அனுமதிக்கவே இல்லை. இதனால் தபால் வாக்கு பதிவு செய்த முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அதிமுக, பாஜக கட்சிகளுக்கு வாக்களித்து விட்டதாக தெரிகிறது. அதேநேரம் திமுக வேட்பாளர்களுக்கு மிக குறைவாகவே ஓட்டு போட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக உளவுத்துறை எடுத்த ரகசிய சர்வேயிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது, என்கிறார்கள். இந்த தபால் வாக்கு ஆளும் கட்சியான திமுகவை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதுமட்டுமின்றி வருகிற 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓரிரு நகரங்கள் என்றில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது பதிவான முதியோர், மாற்றுத் திறனாளிகளின் தபால் வாக்குகளை விட திமுகவுக்கு பலத்த ஷாக் தரும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் எளிதில் கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டு வைத்திருந்த திமுகவின் எண்ணத்தை தவிடு பொடியாக ஆக்குவது போலவும் அமைந்துவிட்டது.

ஏனென்றால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் என 16 லட்சம் பேர் வரை பணியாற்றுகின்றனர். இவர்களது ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர், கணவன், மனைவி என நான்கு பேர் வரை இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால் சுமார் 64 லட்சம் பேர் திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்கும் நிலை ஏற்படலாம். இது தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் 10 சதவீதம் ஆகும்.

ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மின் கட்டணம், சொத்து வரி பல மடங்கு உயர்வு, தாராள போதைப் பொருள் நடமாட்டம், சிறுமிகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, திமுகவினரின் நில அபகரிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதையும் செய்து தரத் தவறியது என்பன போன்றவற்றால் திமுகவுக்கு 10 சதவீத வாக்குகள் வரை குறையும் என்று பல்வேறு கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த 53 சதவீத வாக்குகள் வரும் தேர்தலில் 43 சதவீதமாக சரியும் என்றும் தெரிகிறது.

இந்த நிலையில் மேலும் 10 சதவீதம் குறைந்தால் திமுகவின் பாடு படுதிண்டாட்டம் ஆகிவிடும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்களது ஓட்டுகளை அதிமுகவுக்கு 40 சதவீதமும், பாஜகவுக்கு 15 சதவீதமும் நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீதமும், நோட்டாவுக்கு 10 சதவீதமும் பதிவு செய்யலாம் என்றும் 20 சதவீதம் பேர் மட்டும் வழக்கம்போல் திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஓட்டு போடலாம் என்றும் உளவுத்துறையின் அந்த ரகசிய சர்வேயில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் எஞ்சிய 10 சதவீதம் பேர் தேர்தலை புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

இதன் அடிப்படையில் பார்த்தால் திமுக கூட்டணிக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், அதிமுக கூட்டணி
10 இடங்களையும்,பாஜக அணி 4 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான சூழல் உருவாகி இருப்பதாகவும் உளவுத்துறையின் அந்த சர்வேயில் தெரியவந்துள்ளது, என்கிறார்கள்.

மேலும் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக ஆகியவற்றின் தீவிர தேர்தல் பிரச்சாரம் காரணமாக இன்னும் மூன்று தொகுதிகளை திமுக இழக்க நேரிடலாம் என அதில் கூறப்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்களில் ஐந்து பவுனுக்கும் குறைவாக அடமானம் வைத்து நகைக் கடன் பெற்ற
49 லட்சம் பேரில் 13 லட்சம் பேரது கடனை மட்டுமே திமுக அரசு தள்ளுபடி செய்தது. எஞ்சிய 36 லட்சம் பேர் அடமானம் வைத்த நகையை மீட்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இவர்கள் அனைவரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஏனென்றால் 2021 தேர்தலுக்கு முன்பு நகைக் கடன் தள்ளுபடி என்னும் திமுக வாக்குறுதியை ஒவ்வொரு ஊரிலும், மேடைகள் தோறும் பிரச்சாரம் செய்தவர் உதயநிதிதான். இந்த 36 லட்சம் பேரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்காமல் போகும் அபாயமும் உண்டு.

தமிழக அரசின் உளவுத்துறை எடுத்த சர்வேயின் அடிப்படையில் தயாரித்துள்ள அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட அதைப் படித்துப் பார்த்ததும் அவர் மிகுந்த அதிர்ச்சியடைந்து, அத்தனை அமைச்சர்களையும் உடனடியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து பேசி சமாதானப்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, அரசியல் பார்வையாளர்கள் கூறும்போது, “கருணாநிதியை பின் தொடரும் அவரது மகன் ஸ்டாலினும் தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பார் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு ஊழியர்கள் நடத்திய பல போராட்டங்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்துவிட்டு வந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் பழைய ஓய்வு ஊதிய திட்டம் நிறைவேற்றப்படவே இல்லை.

இதுபோன்ற விஷயங்களில் கருணாநிதி எப்போதுமே மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அவருக்கு தனிப்பட்ட முறையில் கரிசனமும் உண்டு. மேலும் தேர்தல் பணிகளின்போது வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு இவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவதால் அதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களது கோரிக்கைகளை கருணாநிதி உடனடியாக நிறைவேற்றியும் விடுவார்.

ஆனால் இந்த சூட்சமத்தை அவருடைய மகனும் முதலமைச்சருமான ஸ்டாலின்
புரிந்து கொண்டதாக தெரியவில்லை. இப்போது தும்பை விட்டு விட்டு வாலை பிடித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் பலமான கூட்டணியை திமுக அமைத்து இருந்தாலும், பழைய ஓய்வூதிய வாக்குறுதி திமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் குடைச்சலை கொடுப்பதாகவே அமையும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்தார்களா? என்பதை தெரிந்துகொள்ள ஜூன் நான்காம் தேதி வரை காத்திருக்கவேண்டும். அதுவரை பரபர சஸ்பென்ஸ்தான்.

Views: - 117

0

0