குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… ஜுலையில் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடுவது எப்போது..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட TNPSC…!!

Author: Babu Lakshmanan
9 March 2023, 4:20 pm
TNPSC Exam - Updatenews360
Quick Share

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கியமான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி, 397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினர்.

தேர்வுக்கான அறிவிப்பு வரும்போதே, அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகள் அப்போதும் முடிவுகள் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தேர்வாணையம் அறிவித்தது. ஆனால், அப்போதும் வெளியாகவில்லை.

இதனிடையே, மார்ச் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக இடங்கள் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி டுவிட்டரில் ‘வி வான்ட் குரூப்4 ரிசல்ட்’ என்ற ஹேஷ்டேகை தேர்வை எழுதிய தேர்வர்கள் டிரெண்டாக்கினர். மீம்ஸ் போட்டும் நகைச்சுவையாக தங்களின் ஆதாங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்தநிலையில், கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் துரிய கதியில் நடைபெற்று வருவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

Views: - 384

0

0