1999ல் நடந்ததை மறந்துட்டீங்களா? இது திமுகவுக்கு வெட்கக்கேடு : செய்தியாளர் சந்திப்பில் புயலை கிளப்பிய இபிஎஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 1:42 pm
Edappadi - Updatenews360
Quick Share

திமுக அரசு நாடகமாடுகிறது. தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து முடித்து விட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

கொடநாடு கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள குற்றவாளிகளுக்கு திமுக காரர் ஜாமீன் கொடுத்துள்ளார். திமுக வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாடுகிறார்கள்.

கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள் செயல்படாததால் வழக்கு விசாரணை தாமதமானது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர், புதிய ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு, 290 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 90 சதவீத விசாரணை முடிந்தது. திமுக ஜாமீன் தாரரை விசாரிக்க தாமதம் செய்வது ஏன்?

காவிரி நதிநீர்ப் பிரச்சினை :

சட்டப் போராட்டம் நடத்தி 50 ஆண்டு கால காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் அதிமுக சாதக தீர்ப்பைப் பெற்றது. அதை அமுல்படுத்த தங்களது INDIA கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆளும் கர்நாடக அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சரை பெங்களூரில் சந்தித்த போது வலியுறுத்தாது ஏன்? தமிழக பிரச்சினையையே INDIA கூட்டணி அமைத்ததால் சரி செய்ய முடியாத மு.க. ஸ்டாலின், இந்திய அளவில் பிரச்சினைகள் சரி செய்யப் போவதாக சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்காக எங்களது எம்.பிக்களால் 22 நாட்கள் நாடாளுமன்றமே முடங்கியது. காவிரி டெல்டா பகுதியில் பயிர்கள் கருகுகின்றன. காவிரி டெல்டா விவாயிகள் துயர் துடைக்காத அரசாக திமுக இருக்கிறது.

பி.ஜே.பி. தீண்டத்தகாத கட்சியா?

அதிமுக மிகப்பெரிய கட்சி. 2 கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சி. பி.ஜே.பி. என்ன தீண்டத்தகாத கட்சியா? அதனுடன் நீங்கள் 1999 ல் கூட்டணி அமைத்து, உடல் நிலை சரியில்லாத போது, இலாகா இல்லாத அமைச்சராக உங்கள் முரசொலி மாறன் நீடித்தாரே?

கட்சிக் கொள்கை என்பது வேறு. தேர்தல் கூட்டணி என்பது வேறு. அரசியல் சூழலுக்கு தகுந்த மாதிரி, தேர்தல் கூட்டணி அமைப்பது தான் நடைமுறை.

4500 கோடி ஊழல் வழக்கு :

என் மீது போடப்பட்ட ரூ.4500 கோடி ஊழல் வழக்கை, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திரும்பப் பெற முயற்சித்தும், தொடர்ந்து நடத்தி, ஊழலற்றவன் என நிரூபித்தேன். ஆனால் திமுக அமைச்சர்கள் மேல், அம்மா ஆட்சியில் போடப்பட்ட வழக்கை, அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் திமுக அரசு வழக்கறிஞர்களை நியமித்து, வெற்றிப் பெறச் செய்ததை இன்று உயர் நீதி மன்றம் தானாக விசாரிப்பது வெட்கக் கேடு.

மகளிர் உரிமைத் தொகை:

திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை விஷயத்தில் 27 மாதங்களாகியும் தராமல் இழுத்தடித்து வருகிறது. இது மகளிரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

விலைவாசி உயர்வு :

மின் கட்டணம் உயர்ந்து விட்டது. பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டது. விலைவாசி 40 சதவீதம் உயர்ந்து விட்டது. உணவுப் பொருள், மேல் சட்டை, கால் செருப்பு அனைத்து விலைகளும் உயர்ந்து விட்டது. மக்கள் கொந்தளித்து போய் உள்ளார்கள்.

திமுக அரசு கபட நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகிறது. மு.க. ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் மீது அக்கறையில்லை. தனது குடும்ப வளர்ச்சியிலேயே அக்கறை செலுத்துகிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள்
என எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

Views: - 194

0

0