வெளுத்து வாங்கும் கனமழை… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 6:23 pm
school - Udpatenews360
Quick Share

வெளுத்து வாங்கும் கனமழை… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!!

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தில் அதிக மழை பெய்து வருகிறது. நாளை அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை முதலே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் நள்ளிரவு முதல் விடாமல் கனமழை கொட்டி வருகிறது.

இதனால் கன்னியாகுமரியில் தாழ்வான பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. நாகர்கோவில் மாநகரிலும் இடைவிடால் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, வடசேரி, மீனாட்சிபுரம் பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி சாலை ஆகிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அது போல் தூத்துக்குடியிலும் அதிக மழை பெய்து வருகிறது. தென்காசி பகுதியில் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அருவி நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சாலைகளிலும் முட்டி அளவுக்கு நீர் தேங்கியுள்ளதால் இளைஞர்கள் நீச்சலடித்து வருகிறார்கள்.

நெல்லையில் அதிக மழை பெய்து வருவதால் தாமிரபரணி, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லையில் சொரிமுத்து அய்யனார் கோயில், அகஸ்தியர் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளை அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை 18ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 892

0

0