கைகொடுத்த நஞ்சப்பா சத்திரத்தை கைவிடாத விமானப்படை… கிராமத்தை தத்தெடுத்து அதிரடி… பல சலுகைகளும் அறிவிப்பு
Author: Babu Lakshmanan14 December 2021, 6:50 pm
நீலகிரி : குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த போது உதவிய நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை இந்திய விமானப் படை தத்தெடுத்துள்ளது.
குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டர் விபத்து நீலகிரி போலீசார் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், விமானப் படை தரப்பில் இருந்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி மற்றும் ராணுவத் தளபதி ஆகியோர் அடுத்தடுத்து ஆய்வு செய்தனர். மேலும், விபத்தில் நிகழ்ந்த போது, மீட்பு பணிகளில் உதவி நஞ்சப்பா சத்திரம் கிராம மக்கள் பெரிதும் உதவி செய்தனர். எனவே, அவர்களுக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்பு படை அதிகாரிகள், அந்தக் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியதுடன், அவர்களை கவுரவப்படுத்தினர்.
இந்த நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் நஞ்சப்பா சத்திரம் ஆகிய இடங்களில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், தென் பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அருண் தலைமை வகித்து, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது :- ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணிகளில் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். உதவி செய்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். நம் நாட்டில் இதுபோன்ற கிராமம் இருப்பது நமக்கு பெருமையளிக்கிறது.
விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்றால், அதற்கு கிராம மக்களாகிய நீங்கள்தான் காரணம். இதற்காக, நிவாரணப் பொருட்களை வழங்கினால் மட்டும் தீராது. இந்த கிராமத்தை அடுத்த ஆண்டு டிச.,8ம் தேதி வரை தத்தெடுத்துக் கொள்கிறோம். மாதந்தோறும் மருத்துவக் குழுவினருக்கு இந்தக் கிராமத்திற்கு வந்து இலவச மருத்துவ பரிசோதனை செய்வார்கள். இங்குள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த குடும்பத்தினர், ராணுவ மருத்துவமனையில் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அதேபோல, மீட்பு பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.
இதைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்தின் போது உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நஞ்சப்பா சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, சந்திரகுமார் ஆகியோருக்கு தலா ரூ.5,000 சன்மானமாக வழங்கப்பட்டது.
0
0