உருவானது ஐதராபாத் தொங்கும் மாநகராட்சி : மேயரை தேர்வு செய்யும் கிங் மேக்கரானார் ஒவைசி!!

5 December 2020, 12:58 pm
kcr - ovaisi - updatenews360
Quick Share

ஐதராபாத் : தெலுங்கானாவில் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மேயரை தேர்வு செய்யும் அதிகாரம் ஒவைசியிடம் சென்றுள்ளது.

150 வார்டுகளைக் கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக மற்றும் ஒவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 74.67 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, 9,101 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் 10, ஓவைசியின் எஐஎம்ஐஎம் 51 இடங்களில் போட்டியிட்டது. வாக்குச்சீட்டு மூலம் நடந்த இந்தத் தேர்தலில் 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில், ஆளும் டிஆர்எஸ் கட்சி 56 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலைக் காட்டிலும் மக்களின் அமோக ஆதரவு பெற்று பாஜக 49 வார்டுகளுடன் 2வது இடத்தை பிடித்தது. ஓவைசி கட்சி 43 வார்டுகளை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை என்ற நிலையில், அங்கு தொங்கு மாநகராட்சி உருவாகியுள்ளது.

ஆளும் டிஆர்எஸ் கட்சி மேயர் பதவி கிடைக்க வேண்டும் எனில் குறைந்தது 67 உறுப்பினர்களின் ஆதரவாவது தேவையாகும். ஓவைசியின் எஐஎம்ஐஎம் கட்சிக்குதான் மேயரை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொள்கையில் பாஜக மற்றும் எஐஎம்ஐஎம் கட்சி எதிர் எதிரானது என்பதால், டிஆர்எஸ் – எஐஎம்ஐஎம் கூட்டணி அமையவே அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் மாநகராட்சியின் 136-வது வார்டான நீரத்மெட் பகுதியில் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0