பெட்ரோல் டீசலைத் தொடர்ந்து கேஸ் சிலிண்டர்..! சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம்..? மத்திய அமைச்சர் அதிரடி..!

26 June 2020, 9:02 pm
Dharmendra_Pradhan_UpdateNews360
Quick Share

மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிவாயு விலை நிர்ணயம் குறித்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அதற்கு பதிலாக படிப்படியாக எரிவாயு விலையை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய எரிபொருள் தேவை 2019 ஜூன் மாத அளவில் 85 சதவீதமாக உள்ளது என்றும், நிதியாண்டு 2020-21′ இன் இரண்டாவது காலாண்டின் முடிவில், எரிபொருள் தேவை வழக்கம் போல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜெட் எரிபொருள் தவிர நாட்டின் எரிபொருள் தேவை செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் கொரோனா வைரஸுக்கு முந்தைய நிலைக்கு மீட்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

தொடர்ந்து 20வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயைத் தாண்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து செலவுகளுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 80 ரூபாய்க்கும் மேல் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சற்று தாமதமானாலும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  தனியார்மயமாக்கலுடன், நாடு எரிபொருள் துறையில் விரைந்து முன்னேறும் என்றும் பிரதான் மேலும் கூறினார்.