தேர்தல் களம் திமுக VS அதிமுக என மாறுகிறதா?… பரிதவிப்பில் தமிழக பாஜக!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 9:12 pm
CM stalin
Quick Share

தேர்தல் களம் திமுக VS அதிமுக என மாறுகிறதா?… பரிதவிப்பில் தமிழக பாஜக!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. சென்ற தேர்தலில் திமுக அமைத்த அதே கூட்டணி இப்போதும் தொடர்வதால் 39 தொகுதிகளையும் அது அப்படியே அள்ளி விடும் என்று முதலில் கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதுதான். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறிவிட்டு தேமுதிக, புதிய தமிழகம், எஸ் டி பி ஐ ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தது பற்றி கேலியான விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

அதேநேரம் பாஜக கூட்டணியும் பெரிய அளவில் உருவாகவில்லை. பாமக, அமமுக ஆகியவைதான் அதன் பிரதான கூட்டணி கட்சிகள். ஓபிஎஸ் அணி, ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவை சிறு சிறு கட்சிகள் என்பதும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கு வாக்கு வாங்கி உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் பாமகவுக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கி கிடையாது. அதேபோல டிடிவி தினகரனின் அமமுகவுக்கு வட மாவட்டங்களிலோ, கொங்கு மண்டலத்திலோ செல்வாக்கு இல்லை.

இப்படி ஒரே கூட்டணியில் இருந்த அதிமுகவும், பாஜகவும் தனித்தனி அணிகளை அமைத்து போட்டியிடுவதால் திமுக கூட்டணி சுலபமாக வெற்றியை தட்டிப் பறித்து விடும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருந்தது.

ஆனால் ஒரேயொரு விஷயத்தை பலரும் மறந்து விட்டனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக திமுகவின் ஆட்சி நடக்கிறது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைவு, மின் கட்டணம், சொத்து வரி பல மடங்கு எகிறி இருப்பது, அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு, போதைப் பொருள் தாராள நடமாட்டம், சிறுமிகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம், பட்டியிலின இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் போன்றவை திமுக அரசின் மீது மக்களுக்கு பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், சாதாரண அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், அரசு பள்ளிகளில் 16 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் சாதனைகளாக கூறினாலும் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

இதனால் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக வாங்கிய
53 சதவீத ஓட்டுகளை அப்படியே மீண்டும் பெறுவது மிகவும் கடினம். 10 முதல் 15 சதவீத வாக்குகள் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பது இதுவரை வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

இதன்படி பார்த்தால் திமுக கூட்டணிக்கு சராசரியாக 38 முதல் 43 சதவீதம் வரையில் மட்டுமே ஓட்டு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எஞ்சிய சுமார் 60 சதவீத வாக்குகளில் 42 சதவீதம் அதிமுகவுக்கோ, பாஜகவுக்கோ சென்று விட்டால் திமுக கூட்டணியால் அதிகபட்சம் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியாது என்பது அரசியல் கணக்கு ரீதியான கணிப்பாகும்.

இதனால் தமிழகத்தில் தங்களுக்கு எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் என்று பாஜக நம்புகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தென்சென்னை, கிருஷ்ணகிரி ஆகிய 9 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் இந்த இடங்களை மட்டுமே குறிவைத்து பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ளும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது.

இதில் தற்போது ராமநாதபுரத்தை முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பாஜக ஒதுக்கிவிட்டது. அவர் சுயேச்சையாக போட்டியிடுவதால் அங்கே அவருக்கு எத்தனையாவது இடம் கிடைக்கும் என்ற கேள்விதான் விவாதப் பொருளாக உள்ளது.

தென்காசியை கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கி விட்டதால் ஜான் பாண்டியன் அங்கு வெற்றி பெறுவாரா என்பதும் கேள்விக்குறியாக மாறிவிட்டது.

நீலகிரி தொகுதியைப் பொறுத்தவரை மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜ்யசபா எம்பி பதவியை பெற்றுக்கொண்டு விட்டு மிகவும் பாதுகாப்பான நிலையில்தான் தேர்தலை சந்திக்கிறார் என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்துள்ளது. தான் வெற்றி பெறுவது உறுதி என்றால் அவர் ஏன் முதலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட மறுத்தார் என்ற கேள்வியும் எழுகிறது. இது அவருக்கு சற்று சறுக்கல்தான்.

கிருஷ்ணகிரி தொகுதியில் பாஜக ஆரம்பத்தில் காட்டிய வேகம் தற்போது தணிந்து விட்டது. இதனால் அங்கு வெற்றி பெற நினைப்பதும் கடினமான ஒன்றுதான்.

இப்படி நான்கு தொகுதிகளில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு சுருங்கி விட்ட நிலையில் எஞ்சிய ஐந்து இடங்களிலும் பலத்த போட்டிதான் நிலவுகிறது.

அதேநேரம் தர்மபுரியில் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சௌமியா களம் இறக்கி விடப்பட்டிருப்பதால் அந்த தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு பலத்த சவால் எழுந்துள்ளது.

தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜக கூட்டணி சார்பாக போட்டியிடுகிறார். முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி இது என்பதால் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனுக்கு அவர் டஃப் பைட் கொடுக்கிறார்.

இதேபோல் வேலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ சி சண்முகம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு பலத்த சவாலை அளிக்கிறார். பெரம்பலூரில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், திமுக வேட்பாளர் அருண் நேருவுடன் சரிக்கு சரியாக மல்லுக் கட்டுகிறார்.

இந்த நான்கு தொகுதிகளையும் பாஜகவுக்கு சாதகமானது என்று எடுத்துக் கொண்டாலும் கூட இதில் எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலைதான் உள்ளது.

இதன் மூலம் மற்ற 30 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும்தான் வெற்றிக்காக போராடுகின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த நிலையில்தான் இதை உறுதிப்படுத்துவது போல பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் அளித்த பேட்டியில் “எடப்பாடி பழனிசாமியை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. 2021 தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு வியூகங்களை வகுத்தோம். ஆனாலும் அது நடக்கவில்லை. அதற்குக் காரணம் எடப்பாடி பழனிசாமியின் அயராத உழைப்புதான்” என்று கூறி இருந்தார்.

அடுத்ததாக பிரபல அரசியல் பகுப்பாய்வாளர் சுமந்த் சி ராமன் நான்கு தினங்களுக்கு முன்பு திமுகவுக்கு பலத்த சவாலை அதிமுக அளிக்கும் என்று அதிரடி காட்டினார்.

சமீபகாலமாக பாஜகவை தீவிரமாக ஆதரித்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் பிரபல யூ டியூபர் மாரிதாஸ் தனது X வலைத்தள பதிவில் பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து தமிழக தேர்தல் கள நிலவரத்தின் எதார்த்த நிலையை உணர்த்துவதாக உள்ளது.

அப் பதிவில், “தமிழக பாஜகவில் இருந்து யாரோ செல்கிறார்கள் எனில் பெரிய செய்தி அல்ல. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரும், பட்டியலின மக்களின் முக்கிய முகமாக இருந்த மாநில தலைவர் தடா பெரியசாமி போன்ற மதிக்கத் தக்க மனிதர்கள் கட்சியை விட்டுச் செல்கிறார்கள் எனில் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய சேதாரம் இது. 

அதிமுக தலைமையில் தொடர் நகர்வுகள் களத்தைத் தீவிரமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் அதிமுக தன் அடையாளத்தைக் களத்தில் இழக்காமல் மீள்வது அக்கட்சிக்கு முக்கிய நல்ல செய்தி. தன் கட்டமைப்பு பலத்தை மீண்டும் காட்டுகிறது அதிமுக. இதனால் களம் திமுக vs அதிமுக என மெல்ல தீவிரமடைகிறது பல தொகுதிகளில்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

“இது உண்மைதான்” என்று அரசியல் பார்வையாளர்களும் கூறுகின்றனர்.

“அதிமுகவிற்கு பெரிய அளவில் கூட்டணி அமையவில்லை என்றாலும் கூட அது வாக்காளர்களிடம் பேசப்படாத அளவிற்கு எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பொதுக் கூட்டங்களில் அனல் பறக்க பேசி வருகிறார். குறிப்பாக திமுக அரசு மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் மேடைகளில் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் கூட அதை சட்டப்பேரவை தேர்தல் போல மாற்றியமைத்து தனது பிரச்சார யுக்தியை கையாண்டு வருகிறார். இது வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும் அதிமுகவின் அடிப்படைக் கட்டமைப்பு பலமாக இருப்பதால் எந்த ஊரில் பொதுக்கூட்டம் என்றாலும் அதை பிரமாண்டமாக அக் கட்சியினரால் நடத்த முடிகிறது.
இது தவிர 30 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி என்பதால் மாநிலத்தின் மூலை முடுக்குதோறும் அதிமுகவால் பயனடைந்தோர் ஏராளம். அதுவும் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு கைகொடுக்கும் என்று கூறலாம். அதேநேரம் பல தொகுதிகளில் எதிர் கூட்டணி கட்சியினர் அதிமுகவுக்கு வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளதையும் காண முடிகிறது.

பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர் அண்ணாமலை மட்டுமே தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்கிறார். இது தவிர அவர், தான் போட்டியிடும் கோவை தொகுதியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அதேநேரம் மற்ற தலைவர்களின் பிரச்சாரம் அந்த அளவிற்கு வாக்காளர்களை ஈர்த்ததாக தெரியவில்லை. மேலும் பல நகரங்களில் பாஜகவுக்கு இன்னும் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பாஜகவுக்கு மௌன வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது உண்மைதான். அதற்காக பிரச்சாரம் செய்யாமலேயே அவர்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்று நினைப்பதும் தவறு. இங்கேதான் பாஜகவிற்கு முன்பாக அதிமுக பல படிகள் முன்னிலையில் உள்ளது” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடும் போட்டி திமுக VS அதிமுக கூட்டணிகளுக்கு இடையேயானதா? அல்லது பாஜக இரண்டாவது இடத்துக்கு முந்துகிறதா? என்பது ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்!

Views: - 120

0

0